திருப்பூர்: திருப்பூரில் தீபாவளி பண்டிகைக்கான பின்னலாடை உற்பத்தி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இளைஞர்களை கவரும் விதமான பிரத்தியேக டிசைன்களிலும் பின்னலாடைகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் குளிர்கால ஆடர்களை முடிக்கும் முனைப்பிலும் உற்பத்தியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் தீபாவளி பண்டிகைக்கான பின்னலாடை உற்பத்தி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இளைஞர்களை கவரும் விதமான பிரத்தியேக டிசைன்களிலும் பின்னலாடைகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் குளிர்கால ஆடர்களை முடிக்கும் முனைப்பிலும் உற்பத்தியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது புத்தாடைகள் தான். அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களை பண்டிகைக்கு ஏற்றார் போல் தயார்படுத்தி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு பெயர் பெற்றவை.

நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் 46 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி சுழலில் சிக்கி தவித்தது. ஆர்டர்கள் இன்றி பல நிறுவனங்கள் மூடப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின. இந்த ஆண்டு டாலர் மதிப்பு உயர்வு காரணமாக புதிய குளிர்கால ஆர்டர்கள் வரப்பெற்றுள்ளதால் அவற்றை முடிக்கும் உத்வேகத்தில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

சாயமில்லா டி-சார்ட்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் திருப்பூரில் இருந்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இந்த மாதம் பிரத்தியேகமான டிசைன்களில் பின்னலாடைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தாண்டு சாயம் ஏற்றப்படாத டி-சர்ட்கள் இளைஞர்களை கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வலைத்தள பயன்பாடு இளைஞர்களிடையே அதிகம் இருப்பதால் வெளிநாட்டில் உள்ள டிசைன்களால் அதிகம் கவரப்படுகின்றனர்.

அதைக் கருத்தில் கொண்டு பட்டன் டி-சர்ட்டுகள், அகார்லிக், லைக்ரா ரகங்களில் வி-நெக் டி-சர்ட்கள் தீபாவளிப் பண்டிகைக்காக தயாரிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:-
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தவர்களே அதிகம் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஆண்டு முழுவதும் பணியாற்றி வரும் நிலையில் பெரிய பண்டிகையான தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம்.

அப்படி ஊருக்குச் செல்பவர்கள் நிச்சயம் 10 முதல் 15 நாட்கள் வரை விடுப்பு எடுப்பது வழக்கம். இதனால் தொழிலாளர்களை நம்பி புதிய ஆர்டர்களை எடுப்பதும், எடுக்கப்பட்ட பழைய ஆர்டர்களை முடிப்பதும் சிரமமான காரியமாகிவிடும் என்பதால் பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனங்கள் இரவு பகலாக பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
போனஸ்
தீபாவளிக்கு முன்னதாக குளிர்கால ஆர்டர்களை முடித்து கோடைக்கால ஆர்டர்களை தொடங்கவும் திட்டமிட்டுள்ளனர். அதே போல, கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போல தீபாவளி போனஸ் இந்த ஆண்டும் 8.33 சதவீதம் நிச்சயமாக வழங்கப்படும். திறன் சார்ந்த போனஸ் உயர்வு அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்து வழங்கும்.
உள்நாட்டின் பின்னலாடை தேவையில் 75 சதவீதத்தை புர்த்தி செய்யும் திருப்பூர் உற்பத்தியாளர்கள், தீபாவளியை எதிர்நோக்கி பெருமளவு ஆடைகளை உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளனர். தற்போது சில்லறை வர்த்தகத்தில் சுணக்கமான நிலை காணப்படுவதால் தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகளையே நம்பி உள்ளனர்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். சில்லறை வர்த்தகத்தின் விற்பனையே தங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். போனஸ் தொகையை பொருத்த வரை பெரும்பாலான நிறுவனங்கள் போனஸ் தொகையை கொடுத்து விட்டன. மீதமுள்ள நிறுவனங்களும் இந்த வாரத்தில் போனஸ் கொடுக்க அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னலாடை உற்பத்தியாளர் பாபுஜி கூறுகையில், "வழக்கமாக சாதாரண நாட்களில் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உள்நாட்டு வர்த்தகம் நடைபெறும். பண்டிகை நாட்களில் சதவீதம் திருப்பூர் பின்னலாடைகள் நாடு முழுவதும் நடைபெறும். இந்நிலையில், இந்தாண்டு விலைவாசி உயர்வு, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு 70 சதவீதத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

லாபம் இல்லை
குறு நிறுவன பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு ஆர்டர்கள் அதிகம் இருந்த போதிலும், அதற்கான லாபம் அதிக அளவில் இல்லை. இருந்த போதிலும் வெளிமாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு நடைபெறும் விற்பனையைப் பொறுத்தே லாப சதவீதத்தை கணக்கிட முடியும்.
போட்டி மாநிலங்களை விட வாடிக்கையாளர்களைக் கவரும் பிரத்தியேக டிசைன்களில் பின்னலாடைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி தரத்திற்கு இணையான ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஆர்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன." என்றார்.