நீலகிரி: உதகை மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி : உதகை மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தேவையான அளவு பெய்த காரணத்தினால் நீர் ஆதாரங்களில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது.

உதகை மார்லிமந்து, குன்னூர் ரேலியா அணையிலும் நீர் இருப்பு உள்ள நிலையில் நகரப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை இருக்காது என்று கூறி வந்த நிலையில் தற்போது தனியார் தண்ணீர் விநியோகத்தை எதிர்பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "பார்சன்ஸ் வேலி பம்ப் அவுசில் அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாகவும், எமரால்டு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்காக புதிய குழாய்கள் பதிக்கும் போது, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டதால் தண்ணீர் சில இடங்களில் வீணாகி வருகிறது. இந்த பழுதுகள் விரைந்து சீராக்கி தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்." என்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
