கோவை: நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக இரண்டு கோடி பேருக்கு எம்.எஸ்.எம்.இ வேலைவாய்ப்பை வழங்கி வருவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
கோவை: நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக இரண்டு கோடி பேருக்கு எம்.எஸ்.எம்.இ வேலைவாய்ப்பை வழங்கி வருவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க 50 ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக திங்கட்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கொடிசியா பொன்விழா சிறப்பு அஞ்சல் அஞ்சல் உறையை வெளியிட ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார்.

பின்னர் பேசிய தமிழக ஆளுநர், "50 பேர் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கம் தற்போது 6,604 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. 1 லட்சம் கோடி முதலீடுகளுடன் நாட்டில் 12 சதவீதம், அதாவது 11 லட்சம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களை தமிழகம் கொண்டுள்ளது.
நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை எம்.எஸ்.எம்.இ வழங்கி வருகிறது. மேலும், பொருளாதார மற்றும் நாட்டின் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி எம்.எஸ்.எம்.இ வேலை வாய்ப்பு, ஜி.டி.பி.,யிலும், உள்ளூர் அளவிலான வளர்ச்சிக்கும் வித்திடுகிறது.
6 ஆயிரம் பொருட்களுக்கு மேல் அதாவது 40 சதவீதம் உற்பத்தியிலும், 45 சதவீதம் ஏற்றுமதியிலும் எம்.எஸ்.எம்.இ நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றி வருகிறது. வரும் 2022-க்குள் தேசிய உற்பத்தி கொள்கையில் ஜி.டி.பி.,யை 16 சதவீதத்திலிருந்து - 25 சதவீதமாக உயர்த்தப்படுவதற்கு ஏற்ப எம்.எஸ்.எம்.இ துறையை ஊக்குவிக்க வேண்டும்.
உலக அளவில் ஜவுளி துறையில் கோவை சிறந்து விளங்குகிறது. சிறந்த உபகரணங்களை கோவை உருவாக்குவதால் மோட்டார், பொறியியல் உதிரிப்பாகங்கள் உற்பத்தியில் சர்வதேச சந்தையில் கோவைக்கு தனி மதிப்பும், அடையாளம் உள்ளது.
'பம்ப் சிட்டி ஆப் ஆசியா' என்ற பெயரும், நாட்டின் ஒட்டுமொத்த கிரைண்டர் உற்பத்தியில் 75 சதவீதம் என்பதன் மூலம் பம்ப் செட், கிரைண்டர் ஆகிய உற்பத்தியில் கோவையின் பங்கை உணர முடிகிறது. 3000 உற்பத்தி நிறுவனங்களுடன் தங்க நகை உற்பத்தியிலும் கோவை முக்கியமான நகரம்." என்றார்.
பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிறு-குறு தொழில் முனைவோரின் சாதனைகளை பாராட்டி விருது வழங்குதல், தொழில்துறை சார்ந்த வல்லுநர்களின் சிறப்புரைகள், புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து உரை நிகழ்த்த வெளிநாட்டு வல்லுநர்களை அழைத்தல், கொடிசியா-வின் ஐம்பதாண்டுக் கால வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அம்பேஷ் உபமன்யு, ஜி.டி.சாரிட்டிஸ் ராஜ்குமார், சிறு தொழில் சங்க தலைவர் ராமமூர்த்தி, கொடிசியா தொழில் பூங்கா நிர்வாக இயக்குனர் ஏ.எஸ்.வரதராஜ், பொன்விழா குழு தலைவர் பழனிசாமி, கொடிசியா கவுரவ செயலாளர் தேவராஜ் மற்றும் தொழிற்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
