கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் அழிக்கப்படுவதாக அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தி.மு.க., எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் அழிக்கப்படுவதாக அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தி.மு.க., எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. அதேபோல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறித்த தகவல்கள் அதிகம் வெளிவருவதில்லை.
இந்த நிலையில், இன்று சிங்காநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டீன் அசோகனிடம் டெங்கு, பன்றிக்காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு நோயாளிகள் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உள்ள வார்டுகளுக்கு சென்று பார்வையிட்டார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோவையில் சுகாதார பணிகள் முற்றிலும் செயலிழந்துள்ளது. அதேபோல, டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்புகளின் எண்ணிக்கைகள் மறைக்கப்படுகிறது. ஆனால், நோய் தடுப்புக்கான முன்னெச்சரிக்கைகள் குறைவாகவே உள்ளது.
மாநகராட்சி தூய்மை பணிகளும் மெத்தனமாகவே உள்ளது. ஆகவே மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்தி நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்." என்றார்.