கோவை : சுற்றுச்சூழலை பெருமளவு பாதிக்கும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு பொருட்களை மக்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக, கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் 'மஞ்சப்பை' எனப்படும் பிளாஸ்டிக் மாற்றுப் பொருள் கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது.
கோவை : சுற்றுச்சூழலை பெருமளவு பாதிக்கும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு பொருட்களை மக்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக, கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் 'மஞ்சப்பை' எனப்படும் பிளாஸ்டிக் மாற்றுப் பொருள் கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகம், ராக் அமைப்பு மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்துள்ள இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்களை நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஸ் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் மரு.க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டனர். துணிப்பை வகைகள், மூங்கில் மற்றும் காகிதத்தால் உருவாக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் என சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத ஏராளமான தயாரிப்புகள், 50 ஸ்டால்களில் விற்பனை மற்றும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

வரும் ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்களும் ஒரே இடத்தில் உள்ளதால், பொதுமக்களும், வணிகர்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கிச் செல்கின்றனர்.

ஹோட்டல், ஜவுளிக்கடை, உணவு தயாரிப்பு நிறுவனங்கள் என பல்வேறு தொழில்களுக்குமான பசுமை தயாரிப்புகளும், குழந்தைகள் மற்றும் மகளிர்களுக்கான தயாரிப்புகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் மட்டுமின்றி வீடுகளில் சேகரிக்கப்படும் காய்கறிக்கழிவு, காய்ந்த இலை போன்ற மக்கும் குப்பைகளை எளிய முறையில் மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் கருவிகளும் இந்தக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள 'மஞ்சப்பை' கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. மேலும், பட்டிமன்ற பேச்சாளர் டாக்டர். பர்வீன் சுல்தானா மற்றும் குழுவினர் பங்குபெறும் பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம் இன்று மாலை கண்காட்சி அரங்கில் நடக்கிறது.
