கோவை : விபத்தில்லா கோவையை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள 'உயிர்' அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
கோவை : விபத்தில்லா கோவையை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள 'உயிர்' அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் அதிகம் சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஆண்டுக்கு 15,000 பேர் தமிழகத்தில் சாலை விபத்துகளினால் மரணிக்கின்றனர். தமிழகத்தில் அதிகம் விபத்துகள் ஏற்படும் மாவட்டங்களில் கோவைக்கு 2-வது இடம். அதில், சாலை விதிகளை மதிக்காமல் நடந்து கொள்வதும், மிதமிஞ்சிய வேகமும் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதும்தான் கோவையில் நிகழும் 70 % விபத்துகளுக்கு காரணமாகும்.

சாலை பாதுகாப்பு விதிகளும், சாலை பொறுப்புணர்ச்சியும், போக்குவரத்து நடத்தையும் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி விபத்துகளே இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கத்துடன் 'உயிர்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கோவையின் முக்கிய பிரமுகர்கள், முதன்மையான பெருநிறுவனங்கள், தொழிலகங்கள் என பலரும் இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்த அமைப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஆதரவு தெரிவித்ததுடன், இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், உயிர் அமைப்பின் தொடக்க விழா கோவை கொடீசியா வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நிகழ்வுக்குத் தலைமை தாங்கி, உயிர் அமைப்பினைத் தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட தமிழக அமைச்சர்களும், தமிழக அரசின் உயரதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- 'உயிர்' தன்னார்வ அமைப்பினை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். வாகனங்களை இயக்குபவர்கள் பொறுப்புக்களை உணர்ந்தால் விபத்தை தவிர்க்க முடியும். இந்தத் திட்டத்தில் 'குட்டி காப்ஸ்' என்ற முறையில் குழந்தைகளை ஈடுபடுத்தும் போது, மக்களிடையே மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என நம்புகிறேன். நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் பணியில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் 924 ஆம்புலன்ஸ்கள் இயங்கப்பட்டு வருகின்றன. ஒரு அவசரகால ஊர்தி சராசரியாக மூன்று பேரை காப்பாற்றுகின்றது.
தமிழகத்தில் விபத்து சிகிச்சை மையங்கள் மேம்படுத்தப்படும். புதிய விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக விபத்து சதவீதம் குறைந்துள்ளது. அரசுடன் தன்னார்வ அமைப்புகளும் சேர்ந்து செயல்படும் போது விபத்து பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். விபத்தில்லாத நகரமாக மாற்ற 'உயிர்' அமைப்பை சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இந்த உயிர் அறக்கட்டளை இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக இருக்கும். ரூ. 4.5 கோடி நிதி உதவி செய்து தேவையான விபத்துகாலத்தில் தேவைப்படும் பொருட்களை உயிர் அமைப்பினர் வாங்கி இருக்கின்றனர்.விபத்தில்லாத மாநிலமாக உருவாக்க அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும்.

உயர்மட்ட பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. அது முடிந்தவுடன் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். கோவை புறநகர் பகுதியில் கிழக்கு, மேற்கு புறவழிச்சாலைகளுக்கு நிலம் எடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது. கோவை நகரில் சாலைகளை அகலப்படுத்தும் பணிகளை இந்த அரசு மேற்கொள்ளும். சாலைகளை தரம் உயர்த்த 40 சாலைகளை தேர்வு செய்து, தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. அதில், 19 சாலைகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டது. கோவை, சேலம் பகுதிகளில் பஸ்போர்ட் அமைக்கப்படும்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை பணியானது ஒரு சிலர் நீதிமன்றம் சென்றதால் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை வந்தால் கோவை - சென்னை இடையே 77 கி.மீ. குறையும். எரிபொருளும் மிச்சமாகும். இந்தத் திட்டத்தையும் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு கூறினார்.
தொடக்கவிழாவில், உயிர் அமைப்பின் ‘உயிர் காக்க புரிந்துணர்வு’ ஒப்பந்தத்தில் அரசு அதிகாரிகளுடன் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து உயிர்ச்சேதம் தவிர்க்க எல்லா வகைகளிலும் ஒத்துழைப்போம் என கோவையின் பொதுநல அமைப்புகள், தொழில் அமைப்புகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், ஆன்மீக அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து உறுதியேற்பு எடுத்துக்கொள்ளும் ‘மஹாசங்கல்பம்’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.