கோவை : பழங்குடியின மக்களின் கோரிக்கையை ஏற்று ஆனைக்கட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைத்துக் கொடுத்த தமிழக அரசுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கோவை : பழங்குடியின மக்களின் கோரிக்கையை ஏற்று ஆனைக்கட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைத்துக் கொடுத்த தமிழக அரசுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
24 வீரபாண்டிக்கு உட்பட ஆனைகட்டி பகுதியில் சுமார் 22 மலை கிராமங்கள் உள்ளன. இதில், கிட்டத்தட்ட 8,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி, விவசாயம் மற்றும் கைவினைப்பொருட்கள் செய்யும் தொழில்களை செய்தும் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். மிகவும் ஏழ்மையான இந்த மலைவாழ் மக்கள் மருத்துவ வசதியின்றி இத்தனை நாட்கள் கடும் அவதிபட்டு வந்தனர். இவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ, சாலை விபத்துக்கள் போன்ற மருத்துவ அவசர உதவிகளுக்கோ சுமார் 10 கி.மீ. தூரமுள்ள 24 வீரபாண்டி பிரிவிற்கு தான் செல்ல வேண்டும்.
அதேபோல, இரவு நேரங்களில் யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதால், என்னதான் மோசமான சூழலில் உடல்நிலை இருந்தாலும் நோயாளியை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல இப்பகுதி மக்கள் அச்சப்பட்டு வந்தனர். குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில் அருகில் சரியான மருத்துவமனை இல்லாமல் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதனால், மலை கிராம பழங்குடியின மக்கள், ஆனைகட்டி பகுதியில் மருத்துவமனை அமைத்து தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதற்காக, மலைவாழ் மக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இவர்களது கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை எஸ்.பி. வேலுமணி மற்றும் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி ஆகியோரின் முயற்சியில் ஆனைகட்டி பகுதியிலுள்ள ஜம்புகண்டி என்ற இடத்தில் இன்று புதியதாக ஆனைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில், சுகாதார துணை இயக்குனர் டாக்டர் பானுமதி கலந்து கொண்டு, சுகாதார நிலையத்தைத் திறந்து வைத்தார். இங்கு, சுகாதார நிலையம் தொடங்கப்பட்டதற்கு ஆனைகட்டி பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பழங்குடியின பெண் வள்ளி கூறியதாவது :- இத்தனை நாட்கள் அருகே மருத்துவமனை இல்லாமல் நாங்கள் மிகவும் சிரமத்தில் இருந்தோம். தற்போது, எங்கள் கோரிக்கையை ஏற்று மருத்துவமனை கட்டிக்கொடுத்த தமிழக அரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த சுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும். இந்தப் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இப்படி ஏற்படும் போது முதலுதவி கொடுக்கக் கூட ஒரு சரியான வசதிகள் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், இந்த மருத்துவமனை மலைவாழ் மக்களுக்கு மிகவும் பயன்படும், என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.