திருப்பூர்: நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளி தொடக்க தினமான இன்று அரசு பள்ளி ஆசிரியர்களை பயிற்சி வகுப்பு என வரவழைத்து இதிகாசங்கள் தொடர்பான இந்துத்துவ பரப்புரை செய்ததாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு.
திருப்பூர்: நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளி தொடக்க தினமான இன்று அரசு பள்ளி ஆசிரியர்களை பயிற்சி வகுப்பு என வரவழைத்து இதிகாசங்கள் தொடர்பான இந்துத்துவ பரப்புரை செய்ததாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு.
திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை மற்றும் இதிகாச சங்கமான சமிதி எனும் அமைப்பும் இணைந்து நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரலாற்று அறிவியல் பயிற்சி பட்டறை வகுப்பை ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடத்தினர்.

இந்த பயிற்சி வகுப்பில் துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி சுற்றறிக்கையும் அனுப்பி இருந்தார். அதன்படி, இன்று மாவட்டம் முழுவதுமிருந்து 700 ஆசிரியர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.

பயிற்சி துவங்கியதும் பேசத் துவங்கிய சமிதியினர், ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் என பாடத்திட்டத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத இந்துத்துவ கருத்துக்களை பாடமாக எடுத்து வந்ததாகவும், பாடத் திட்டம் தொடர்பான பயிற்சி வகுப்பு என வருகை தந்த ஆசிரியர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் ஆசியர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், இந்தியர்கள் பயன்படுத்திய கணக்கு முறைகள், கால அளவீடுகள் வானியல் சாஸ்திரங்கள் என அனைத்தும் இதிகாச புராணங்களில் இருந்து மேற்கோள்காட்டி பேசி அறிவியலுக்கு தொடர்பில்லாமல் ஆன்மீக செயல்பாடுகளாலே அனைத்தும் நிகழ்வதாகவும் பயிற்சியை நடத்தியதாக தெரிகிறது. மேலும், 4 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளி துவங்கிய இன்று ஆசிரியர்களை அழைத்து பயிற்சி வகுப்பு என கல்வி முறைக்கு சிறிதும் தொடர்பில்லாத இதிகாச மேற்கோள்களை காட்டி அறிவியல் அல்லாத ஆன்மீகம் என இந்துத்துவ கொள்கைகளை பரப்புவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.

மறுப்பு
இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்ட போது, "நமது பாரம்பரியம் தொடர்பான வரலாற்று வேர் குறித்த பயிற்சி வகுப்பை பள்ளி கல்வித் துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்தோம். ராமாயணம், மகாபாரதம் மட்டுமல்ல நமது பாரம்பரியம் சார்ந்த இதிகாசங்கள் தான் நமது வேர் எனவே அது குறித்த பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்தோம்." என்றார்.
மேலும், ஆசிரியர்களின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவித்த அவர் காமிரா இல்லாமல் கேளுங்கள் பதில் கூறுகிறேன் என்று பதில் ஏதும் சொல்லாமல் தவிர்த்துச் சென்றார்.