கோவை: தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? எனவும், தேர்தலுக்கு முன் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தி.மு.க தயாரா? எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை : தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? எனவும், தேர்தலுக்கு முன் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தி.மு.க தயாரா? எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'மீ-டூ' என்பது பெண்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விவகாரத்தில் ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை.
பிரதமர் மோடி சர்க்கஸ் ரிங் மாஸ்டர், அ.தி.மு.க.,வினர் சர்க்கஸ் கூடாரம் என தி.மு.க, தலைவர் ஸ்டாலின் கூறினார். சர்க்கசில் புலி, சிங்கம் தான் இருக்கும். மேலும், அ.தி.மு.க.,வினரை சிங்கம், புலி என ஸ்டாலின் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? தேர்தலுக்கு முன் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தி.மு.க தயாரா? தேர்தலுக்குப் பின்னர் பிரதமரை தேர்ந்தெடுப்போம் என தி.மு.க கூறினால், அது கபட நாடகம். மறைமுகமாக தி.மு.க-பாஜக உடன்பாடு வைத்துள்ளதால் தான் ராகுல்காந்தியை பிரதமராக அறிவிக்க தி.மு.க தயாராக இல்லை.
அ.தி.மு.க தனித்துப் போட்டியிட்டு 40 தொகுதியிலும் வெற்றி பெறும். தேர்தல் வெற்றிக்குப் பின் பிரதமரை முடிவு செய்வோம். எந்த கூட்டணியிலும் அ.தி.மு.க இல்லை. 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் என்ன தீர்ப்பு வந்தாலும் அ.தி.மு.க.,விற்கு கவலையில்லை.
முதல்வர் மீதான சி.பி.ஐ விசாரணை குறித்து கருத்துச் சொல்ல முடியாது. மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த களங்கமும் இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறார். 5 ஆண்டுகள் முழுமையாக அ.தி.மு.க ஆட்சி நடைபெறும். அ.தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது." என்றார்.