கோவை: மக்கள் ஏற்கும் தலைவராக ராகுல்காந்தி இல்லை என்றும், பா.ஜ.க சாதாரண கட்சி அல்ல என்றும் பா.ஜ.க.,வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை : மக்கள் ஏற்கும் தலைவராக ராகுல்காந்தி இல்லை என்றும், பா.ஜ.க சாதாரண கட்சி அல்ல என்றும் பா.ஜ.க.,வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ஏற்கனவே காங்கிரஸ் தோல்வியடைந்து வரும் நிலையில், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் காங்கிரஸ் தோல்வியடைவது உறுதி. பிரதமர் மோடியுடன் ஒப்பிடும் போது ராகுல்காந்திக்கு மக்கள் செல்வாக்கு குறைவு.
ராகுல்காந்தியை கூட்டணி கட்சிகளோ, மக்களோ அல்லது காங்கிரஸ் கட்சியினர் கூட பிரதமர் வேட்பாளராக ஏற்கமாட்டார்கள். மக்கள் ஏற்கும் தலைவராக ராகுல்காந்தி இல்லை. பா.ஜ.க நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதிகாரப்பூர்வமாக யாருடனும் பா.ஜ.க கூட்டணி குறித்து பேசவில்லை.
கூட்டணி குறித்து பேசுவதற்கு கால நிர்ணயம் வைத்துள்ளோம். மேலும், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான இடங்களை பா.ஜ.க கைப்பற்றும். பா.ஜ.க சாதாரண கட்சி அல்ல, 22 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பலம் பொருந்திய கட்சி. பல ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக மோடி இருக்க வேண்டுமென அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களும், இந்தியர்களும் விரும்புகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.,வின் வியூகம் வெற்றி பெறும். அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.,வுடன் கூட்டணி இல்லை என கூறியுள்ளார். ஊழல்வாதிகளுடனும் 20 ரூபாய் டோக்கன் காரர்களுடனும் பா.ஜ.க கூட்டணி வைக்காது.
நான்கரை ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் மதம் சார்ந்த பிரச்சனை இல்லை. மனம் சார்ந்த பிரச்சனையை தான் எதிர்கொள்கிறோம்." என்றார்.
வடக்கே ராமர், தெற்கே ஐயப்பன் என அரசியல் செய்கிறதா பா.ஜ.க? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும். சபரிமலையில் பின்பற்றப்படும் ஐதீகத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதை தான் பா.ஜ.க வலியுறுத்துகிறது. 18 எம்.எல்.ஏ வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்தாலோ, அசாதாரண சூழல் வந்தாலோ நாடாளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்ற தேர்தலும் வர வாய்ப்புள்ளது." என்றார்.