ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் இடையூறு: வேதனை தெரிவிக்கும் கர்ப்பிணி தாய்மார்கள்..! தண்டனைகள் என்ன?

கோவை: உயிருக்குப் போராடியபடி ஆம்புலன்சில் பயணிக்கும் ஒருவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தாக வேண்டும். அந்த இக்கட்டான பயண நேரத்தை மருத்துவர்கள் 'கோல்டன் ஹவர்ஸ்' என்று வரையறுக்கின்றனர். இந்த பயணத்தின் போது சேமிக்கப்படும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அந்த உயிரைக் காப்பற்ற உதவும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை: உயிருக்குப் போராடியபடி ஆம்புலன்சில் பயணிக்கும் ஒருவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தாக வேண்டும். அந்த இக்கட்டான பயண நேரத்தை மருத்துவர்கள் 'கோல்டன் ஹவர்ஸ்' என்று வரையறுக்கின்றனர். இந்த பயணத்தின் போது சேமிக்கப்படும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அந்த உயிரைக் காப்பற்ற உதவும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்றொரு உயிருக்காக 'சைரன்' சப்தம் ஒலிக்க, சிக்கலான சாலைகள் வழியாக பீறிட்டு செல்கிறது 108 ஆம்புலன்ஸ். இந்த ஆம்புலன்சுக்கு நாம் முறையாக வழி விடுகிறோமா?

108 ஆம்புலன்ஸ் 

108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் கடந்த 2005-ம் ஆண்டில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் ஓர் அங்கமாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இந்த சேவை திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை லட்சக்கணக்கான உயிர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களை மட்டுமல்லாமல், கர்ப்பிணி பெண்களுக்கான பிரசவத்திற்கும், அவசர கதியின் போதும் ஒருவரை மருத்துவமனைக்கு வேகமாக அழைத்துச் செல்லும் உயிர் காக்கும் வாகனமாக உள்ளது.

அவசரம்

'சைரன்' சத்தம் கேட்டவுடன் வாகன ஓட்டிகளான நாம், இடதுபுறமாக ஒதுங்கி, வலதுபுறமாக ஆம்புலன்சுக்கு வழி விட வேண்டும். ஆனால், மனிதாபிமானமற்ற ஒரு சில வாகன ஓட்டிகள் சற்றே மெத்தனப்போக்கை கடைப்பிடிக்கின்றனர். இன்னும் சிலர், ஆம்புலன்ஸ் பின்னால் சென்றால் வேகமாக சென்றுவிடலாம் என்று எண்ணி அதனை பின் தொடர்கின்றனர். இவ்வாறாக ஒரு சிலர் செய்யும் செயல்களால், ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது.

சில 'குடிமகன்கள்' மது போதையில் தள்ளாடியபடி ஆம்புலன்சின் முன்புறம், வழியே விடாமல் செல்வதாகவும் குமுறுகின்றனர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள். 

தண்டனை 

கேரள மாநிலம் பெரும்பாவூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தைக்கு சுவாசக்கோளாறு காரணமாக எர்ணாகுளம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அப்போது, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றது. இதை செல்போனில் பதிவு செய்த ஆம்புலன்ஸ் ஊழியர் பின்னர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் நிர்மல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அதேபோல, கர்நாடக மாநிலத்தில் ஆம்புலன்சுகளை 'ஓவர்-டேக்' செய்பவர்கள் மற்றும் அதற்கு வழி விடாதவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி ஒரு உத்தரவு தமிழகத்தில் வரும் போது 108 ஆம்புலன்ஸ்களுக்கு உள்ள இடைஞ்சல்கள் களையப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸின் ஓட்டுனர் ஆரோக்கியராஜ் கூறுகையில், "சமீபகாலமாகவே 108 ஆம்புலன்சை 'கோல்டன் ஹவர்ஸ்'க்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது மிகவும் கடினமாக உள்ளது. ஒரு சில நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து அதற்குள் ஹெட்போன் போட்டு பாடல் கேட்டு வருவதால், சைரன் சத்தம் அவர்கள் காதில் விழுவதில்லை. அதனால், அவர்கள் வழி விடாதபடி செல்கின்றனர்.

சிலர் வேண்டுமென்ற வழிவிடாமல் இடையூறு கொடுத்து எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது மட்டுமலாது, நோயாளியின் உயிருக்கும் ஊரு விளைவிக்கின்றனர். ஆகவே, ஆம்புலன்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற குற்றங்கள் குறையும்." என்றார்.

கோவையில் நிகழ்ந்த கொடுமை 

கடந்த மாதம் கோவில்பாளைம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றிருந்த கர்ப்பிணி, கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

அந்த ஆம்புலன்ஸ் அத்திபாளையம் பிரிவு சிவா மருத்துவமனை அருகே சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஆம்புலன்ஸின் குறுக்கே இடையூறு ஏற்படுத்தும் வகையில் உட்புகுந்தார். இவர் கொடுத்த தொல்லையால் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல சுமார் 15 நிமிடத்திற்கும் மேல் காலதாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸை ஓட்டி வந்த பைலட் சுரேஷ் கூறுகையில், "கர்ப்பிணி பெண்ணை கோவை அரசு மருத்துவமனைக்குக் கூட்டி செல்ல எனக்கு அவசர அழைப்பு வந்தது. உடனடியாக அங்கு சென்று, அந்த கர்ப்பிணி பெண்ணை துரிதமாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டோம். அதன்படி அவரை அழைத்துக்கொண்டு வரும்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் காந்திபுரம் ஜி.பி., மருத்துவமனை வரை ஆம்புலன்சை வேகமாக இயக்க முடியாதவாறு இடையூறு செய்தவாறு வாகனத்தை இயக்கி வந்தார்.

இதனால், கிட்டத்தட்ட 10 முறைக்கு மேல் வேகமாக பிரேக் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது மிகவும் ஆபத்தான செயல். பிரசவத்திற்கு வரும் தாய்மார்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது எங்களது வழக்கம். 

ஆனால், தேவையற்று பிரேக் அடிக்கவைத்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்த நபர் நடந்துகொண்டார். பின்னர், காந்திபுரம் ஜி.பி., சிக்னல் அருகே அந்த நபர் பைக்கை நிறுத்தும் போது நாம் ஒரு நொடி நிறுத்தி ஏன் இப்படி சென்றாய் என்று கேட்டதற்கு அந்த நபர் எங்களை கடுமையாக திட்டி மன உளைச்சலை ஏற்படுத்தினார். நோயாளியை நாங்கள் கூட்டி செல்லும் போது மருத்துவமனைக்கு கொண்டு சென்று பாதுகாப்பு கொடுப்பதில் தான் எங்கள் பணி தீவிரமாக இருக்கும். ஆனால், இதுபோன்ற தேவையற்ற மன உளைச்சலால் வாகனத்தில் இருக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது." என்றார். 

நடவடிக்கை எடுங்கள்

இது குறித்து கர்ப்பிணி பெண் நர்மதா கூறியதாவது :- ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் மிகுந்த வலியுடனேயே தாய்மையை அடைகிறாள். அவ்வாறாகவே அன்று ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்ல போராடிக்கொண்டிருந்தேன். அப்போது, அந்த ஒரு நபர் நான் செல்லும் ஆம்புலன்சுக்கு இடையூறு செய்வதை அறிந்தேன். 

மகப்பேறு நேரத்தில் அன்று மிகுந்த மன உளைச்சலும், பதற்றமும், நம்பிக்கையின்மையும் எனக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் எனக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதால் பிழைத்தேன். இதுபோன்ற நபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், வேறு யாருக்கும் இதுபோன்று ஏற்படாது." என்றார்.

இதுகுறித்து வழக்கறிஞர் வி.யு. ஜேக்கப் கூறியதாவது :- இவ்வாறாக பிறரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படும் நபரை தண்டிக்க நம் சட்டம் பல வழி வகைகளை வைத்துள்ளது.

இதில், மோட்டார் வாகன சட்டம் 194e-யின் படி ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் செல்லும் நபருக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று இந்த சட்டம் சொல்கிறது. இதில், கோவையில் நோயாளியுடன் வந்து கொண்டிருந்த ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் தொல்லை கொடுத்த நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் இதுபோன்ற தவறுகள் தடுக்கப்படும். இதில், இந்திய தண்டனை சட்டம் 279, 336, 184 இன் படியும் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வழிவகைகள் உள்ளது. 

அதாவது, அஜாக்கிரதையாக ஆபத்தை விளைவிக்கும்படி நடந்து கொண்டாலும், நம் நடவடிக்கைகள் பிற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்தாலும், பிறரை அச்சுறுத்தும் விதத்திலும், விபத்தை ஏற்படுத்தும் விதத்திலும் அபாயகரமாக வாகனத்தை இயக்கினாலும் மேற்கண்ட மோட்டார் வாகன சட்டப்படியும், இந்திய தண்டனைச் சட்டப்படியும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்யலாம். இது ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் வேண்டுமென்றே நெருக்கடி கொடுப்பவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும்." என்றார். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...