கோவை : தபால் துறையின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை (India Post Payments Bank) கோவையில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி இன்று திறந்து வைத்தார்.
கோவை: தபால் துறையின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை (India Post Payments Bank) கோவையில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி இன்று திறந்து வைத்தார்.
ஆர்.எஸ்.,புரம் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக மேற்கு பிராந்திய தபால் சேவை இயக்குநர் வி. ராமசாமி, தமிழக மேற்கு பிராந்திய பொது தபால்காரர் மாரியம்மா தாமஸ் மற்றும் சிறப்பு விருந்திர்களாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.பி., நாகராஜ், எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.ஜி., அருண்குமார், வி.சி., ஆறுக்குட்டி, அம்மன்.கே. அர்ஜீன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், நாடு முழுவதும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை கோவையில் திறந்து வைத்தார்.

தபால்துறையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த வங்கியானது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும். சேமிப்புக் கணக்குதாரர்களுக்கு பூஜ்யம் இருப்புத் தொகை, நெஃப்ட் (NEFT) அல்லது ஆன்லைனில் பணப் பரிமாற்றம், இருப்புத் தொகைக்கேற்ப 4 சதவீத வட்டி போன்ற வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதோடு, ஏற்கனவே, தபால் அலுவலகத்தில் கணக்கு தொடங்கி இருந்தால், அதனை இந்த வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் கணக்குதாரர்கள், கவுண்டர் சர்வீஸ், மொபைல் பேங்கிங் ஆப், மைக்ரோ ஏ.டி.எம்., எஸ்.எம்.எஸ்., மற்றும் ஐ.வி.ஆர்., ஆகியவற்றின் சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் கேஸ் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் இந்த வங்கியின் கணக்கின் மூலம் நேரடியாகப் பெறலாம்.

இதனிடையே, தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்கை அறிமுகம் செய்து வைத்தார். நாடு முழுவதும் 650 கிளைகளும், 3,250 நிர்வாக மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்த இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்குடன், நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் தபால்நிலையங்கள் இணைப்பட உள்ளன.