சாப்பாடு பார்சல் வாங்க பாத்திரம் கொண்டு வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி : பிளாஸ்டிக்கை ஒழிக்க இந்த நடைமுறை சாத்தியமா..?

கோவை : பார்சல் உணவுகளை வாங்க வருபவர்கள் பாத்திரம் கொண்டு வந்தால், விலையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை சாத்தியமானதா..? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


கோவை : பார்சல் உணவுகளை வாங்க வருபவர்கள் பாத்திரம் கொண்டு வந்தால், விலையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை சாத்தியமானதா..? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழக அரசு வரும் ஜனவரி 2019 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. பால், தயிர், எண்ணெய் மற்றும் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தவிர வேறு எதற்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது. அதேபோல, வேறு எந்தப் பொருட்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தலாம், பயன்படுத்தக்கூடாது என்பதை அறிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.



இதனிடையே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், உணவு பொருட்களை வாங்க பாத்திரம் கொண்டு வந்தால் அதற்கு விலையில் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழ்நாடு ஓட்டல் சங்கம் அறிவித்துள்ளது. இதேபோல, கோவை ஓட்டலியர்ஸ் சங்கமும் சாப்பாடு வாங்க பாத்திரம் கொண்டு வந்தால், விலையில் 5% தள்ளுபடி வழங்கப்படும் என கூறியுள்ளது. கோவை மாவட்டத்தில் இச்சங்கத்தின் கீழ் மட்டும் 180-க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 



உணவு விடுதி உரிமையாளர்களின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு இது நடைமுறை சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

உணவு விடுதி அருகில் வசிப்பவர்கள் பாத்திரங்களை எடுத்து வர முடியும். ஆனால், வெளியூர் செல்பவர்கள், அலுவலகம் செல்வோர் என அனைவராலும் பாத்திரங்களை கொண்டு வரமுடியாது. அதேபோல, ஒரு சாப்பாடு வாங்க சாதம், 3 வகை குழம்பு, கூட்டு, பொரியல் என வாங்க ஐந்திற்கும் மேற்பட்ட பாத்திரங்களை எவ்வாறு எடுத்து வர முடியும் எனவும் வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட ஓட்டலியர்ஸ் சங்க செயலாளர் ஆர். பாலசந்தர் கூறுகையில், "பிளாஸ்டிக் தடை என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அனைத்து விசயங்களிலும் இது சாத்தியம் இல்லை. சாப்பாடு வாங்க பாத்திரம் கொண்டு வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், பெரும்பாலும் யாரும் பாத்திரம் கொண்டு வருவதில்லை. 

பிளாஸ்டிக் தடையில் உணவு விடுதிகளுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக அரசாங்கம் மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும். குழம்புகளைக் கட்ட பிளாஸ்டிக் பைகளை விட்டால் வேறு வழியில்லை. ஆனால், அரசாங்கம் அதற்கு மாற்று ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். இது சம்பந்தமாக கோவை மாநகராட்சியிடம் பேசியுள்ளோம். விரைவில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று தொடர்பான கண்காட்சி நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

மக்களும் பாத்திரங்களைக் கொண்டு வந்து சாப்பாடு வாங்கினால் நாங்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம். அதேசமயம், பாத்திரம் கொண்டு வர முடியாத சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பார்சல் செய்ய அரசாங்கம் மாற்று ஏற்பாட்டினை செய்து தரவேண்டும்," என்றார்.

மக்கும் பிளாஸ்டிக் பைகள், மக்காத பிளாஸ்டிக் பைகள் என தற்போது கடைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மக்கும் பிளாஸ்டிக் பைகள் அதாவது 50 மைக்ரோன் தடிமம், அதற்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பைகளை வாங்கும் போது அதற்கான விலை அதிகரிக்கிறது. மீண்டும் அது மக்களிடையே தான் பெறப்படுகிறது. 

இது குறித்து தனியார் அலுவலக ஊழியர் ராஜ்குமார் கூறுகையில், "மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து வருகிறேன். ஆதலால், வெளியூர் பயணங்கள் அடிக்கடி செல்வேன். சில சமயம் உணவு விடுதியில் அமர்ந்து சாப்பிடும் சூழ்நிலை வரும் சில சமயம் பார்சல் வாங்கி தான் சாப்பிட முடியும். அவ்வாறு இருக்க பாத்திரங்களை கொண்டு வருவது சாத்தியமில்லை. அதேபோல, துணி பைகளுக்கு தனியாக விலை கொடுப்பது மாற வேண்டும்," என்றார்.

துணி பைகளை வாங்கினாலும் அதன் விலை அதிகம் தான். எனினும், மக்கள் ஒருமுறை வாங்கிய பையை மீண்டும் பொருட்கள் வாங்க எடுத்து வந்தாலே போதும். ஆனால், அவ்வாறு மக்கள் செய்ய விரும்புவதில்லை. முதலில் மக்களுக்கான விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். அதே சமயம் துணி பைகளுக்கு அரசாங்கம் மானியம் தரவேண்டும். அந்த தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில், "பிளாஸ்டிக் தடை என்பது அனைத்து பிளாஸ்டிக்குகளும் தடை என்பது அல்ல. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும். மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி அவர்கள் பாத்திரம் மற்றும் பொருட்களை வாங்க துணி பைகளைக் கொண்டு செல்ல வேண்டும். அப்படி இல்லாதவர்களுக்கு பாத்திரங்கள் வாடகைக்கு கொடுக்க வேண்டும். துணி பைகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. அப்போது, தான் இது நடைமுறைப்படுவது எளிது," என்றார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்களும் முன் வரவேண்டும். அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு அளித்து பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...