கோவை : தி.மு.க.,வின் தலைவராக ஸ்டாலின் இன்று பதவியேற்றுள்ள நிலையில், அ.தி.மு.க.,விற்கோ, பொதுமக்களுக்கோ தி.மு.க., ஒரு சவாலே கிடையாது என கோவையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கோவை : தி.மு.க.,வின் தலைவராக ஸ்டாலின் இன்று பதவியேற்றுள்ள நிலையில், அ.தி.மு.க.,விற்கோ, பொதுமக்களுக்கோ தி.மு.க., ஒரு சவாலே கிடையாது என கோவையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். கோவையில் அமையவுள்ள மேற்கு புறவழிச்சாலை மக்களின் கோரிக்கை ஏற்றே அமைக்கப்படுகிறது. மக்கள் பயணத்தை வேகமாக்கவே புறவழிச்சாலைகள் அமைக்கப்படுகின்றன.
ஸ்டாலின் தலைமை பொறுப்பில் இருந்த போதுதான் ஆர்.கே.,நகரில் தி.மு.க., டெபாசிட் போனது. மக்களுக்கோ, அ.தி.மு.க.,விற்கோ தி.மு.க., ஒரு சவால் கிடையாது. மு.க., அழகிரி தனிக்கட்சி தொடங்குவது என்ற தகவல் எல்லாம் அவர்களின் உட்கட்சி விவகாரம்.
நடிகர் திலகம் சிவாஜி சிலை நீதிமன்றம் உத்தரவுப்படியே மாற்றப்பட்டது. அ.தி.மு.க.,வும், நாங்களும் சிவாஜி மீது பெரிய மதிப்பு வைத்திருப்பவர்கள். இது சிவாஜி குடும்பத்திற்கும் தெரியும். மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கக் கூடாது எனக் கூறியவர்கள், கலைஞர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்றவுடன் அனைத்து வழக்குகளும் வாபஸ் பெற்றனர்.
அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோரை கட்சி ரீதியான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவே சந்தித்தார். அமைச்சர் ஜெயகுமாருடன் ஏற்பட்ட பிரச்சினை என யார் சொன்னது..?. அ.தி.மு.க.,விற்கு தனிப்பட்ட முறையில் யாரும் (டி.டி.வி., தினகரன்) எதிரியல்ல. தேர்தலில் எங்களை எதிர்த்துப் போட்டியிடுகின்ற கட்சியை எதிர்க்கின்ற கட்சியாக பார்க்கின்றோம், என்றார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.