மறக்க முடியுமா கலைஞரை: கோவையில் கலைத்துறையினர் புகழாரம் - ஸ்டாலினுக்கு மஞ்சள் துண்டு அணிவிப்பு

கோவை: 'மறக்க முடியுமா கலைஞரை' என்ற தலைப்பில் திரைப்பட கலைத்துறையினர் பங்கேற்ற, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

கோவை: 'மறக்க முடியுமா கலைஞரை' என்ற தலைப்பில் திரைப்பட கலைத்துறையினர் பங்கேற்ற, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், நாசர், ராஜேஷ், சத்யராஜ், பிரகாஷ்ராஜ், பிரபு, ராதாரவி, பார்த்திபன், மயில்சாமி, நடிகை ராதிகா, நந்தா, தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.



மாலை 4.45 மணியளவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமை நிலைய செயலாளர் துரைமுருகன் ஆகியோர் விழா மேடைக்கு வந்தனர். மாலை 5.10 மணியளவில் விழாவில் பங்கேற்ற கலைத்துறையினர் கலைஞர் கருணாநிதி புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மேடையில் வெவ்வேறு நாடிகள் பேசியவை பின்வருமாறு

நடிகர்கள் நடிகர் ராதாரவி பேசுகையில், "கலைஞர் என்ற சொல் 'கந்தக சொல்' ஈர்ப்பின் காரணமாக நான் வந்துவிட்டேன். தமிழகத்தின் முகவரி திமுக தான். வரும் 28-ம் தேதி திமுக தலைவராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



சாதாரணமான மக்களின் நிலையை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று பயிற்சி அளித்து, தவம் இருந்து பெற்ற தலைவர் ஸ்டாலினை செயல் தலைவராக அடையாளம் காட்டினார் கலைஞர். அவருடைய கனவுகளை ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். உங்களுக்காக உழைத்தவர்களையும், உழைப்பவர்களையும், பொதுமக்களையும் மறந்து விடாதீர்கள்." என்றார்.

நடிகர் ராஜேஷ் பேசுகையில், "கடந்த 1969-ம் ஆண்டு அறிஞர் அண்ணா உயிரிழந்த போது கட்சி நிலைக்காது என்பதை மாற்றியமைத்தவர் கலைஞர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பல எதிர்ப்புகளை தகர்த்தெழுந்தவர் கலைஞர். அவரது இறுதி ஊர்வலத்தில் வாழ்க்கைக்கான அர்த்தம் தெரியும். கலைஞர் சிறந்த முதல்வராக இருப்பார் என எம்.ஜி.ஆர். நம்பியதால் அறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு முதலமைச்சர் யார்? என்பதற்கு கலைஞர் கருணாநிதி தான் அதற்கு தகுதியானவர் என்று எம்.ஜி.ஆர்., ஆதரவு அளித்தார். மாற்று கட்சியினர் அனைவரிடமும் நல்ல பெயரை பெற்றவர் கலைஞர் கருணாநிதி." என பேசினார்.



நடிகர் மயில்சாமி பேசுகையில், "14 வயதில் அரசியலில் நுழைந்து பல ஆண்டு கால அனுபவம் பெற்றவர் கருணாநிதி. கொள்ளு பேரன், எள்ளு பேரன் என குடும்பத்தாரிடம் சுதந்திரமாக விளையாடி மகிழ்ந்தவர் அவர். இந்த பாக்கியம் யாருக்கும் கிடைக்காது. நகைச்சுவையாகச் சரளமாக பேசும் திறன் கொண்டவர் கலைஞர். அவரை பற்றி பேசுவதே பெருமை. என்னை சந்திக்கும் போது உன் காமெடியை பார்த்து தான் நான் தினமும் உறங்குகிறேன் என கலைஞர் சொன்னது எனது பாக்கியம்." என பேசினார்.



தெலுங்கு நடிகர் மோகன் பாபு பேசுகையில், "திருப்பதி சித்தூர் மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் சினிமாவில் இணைவதற்கு சென்னைக்கு படிக்க வந்தேன். தமிழ்த் தாய் எனக்கு பால் கொடுத்தது வளர்த்தெடுத்தது. கலைஞர் கருணாநிதி சிறந்த மனிதர். தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனெனில், கலைஞர் ஆட்சியில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக இருந்தது.



தமிழின் பாதுகாவலர் கலைஞர். மேலும், அவருடைய வாழ்க்கை பரிமாணங்கள் நமக்கு வரலாறு. அவர் வசனம் எழுதிய பராசக்தி, மலைக்கள்ளன், மனோகரா போன்ற படங்கள் வரலாற்றுப் படங்கள். அவருடைய வசனத்தில் நடிக்க எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. அண்ணாவையும், கலைஞரையும் பிரிக்க முடியாது." என்றார்.

நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், "விரைவில் தி.மு.க.,விற்கு தலைவராகவுள்ள ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள். கலைஞர் இல்லாத அரசியல், அறிவாலயம், கலை உலகம், தமிழகம், கோபாலபுரம் மற்றும் கழகம் அனாதையாக உள்ளதாகத் தோன்றுகிறது." என்றார்.



நடிகர் பிரபு பேசுகையில், "நடிகர் சிவாஜி கணேசன் சிலை நிறுவுவதற்கு காரணமாக இருந்தவர் கலைஞர். அது சில காரணங்களால் அகற்றப்பட்டது. அந்த சிலை தொடர்ந்து வைக்கப்பட்ட இடத்தில் இருப்பதை வருங்காலத்தில் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்." என்று ஸ்டாலினிடம் குறிப்பிட்டுப் பேசினார்.



நடிகர் பார்த்திபன் பேசுகையில், "தமிழில் நான் கிறுக்கல்கள் என்றால் கலைஞர் திருக்குறள். அவரது மரணம் துயரமானதாக இருப்பினும், கலைஞரின் மரணம் உயரமானது. தமிழ் எனக்கு உயிர் போன்றது. கலைஞர் மறைவால் தமிழுக்கே உயிர் போனது. இதனை ஈடு செய்ய முடியாது." என்றார். பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று ஸ்டாலினை அழைத்த பார்த்திபன், அவருக்கு மஞ்சள் நிற துண்டை அணிவித்தார்.



பின்னர், "இந்த மஞ்சள் நிற துண்டுக்கு பல அர்த்தங்கள் உள்ளது. தமிழினம், தமிழ் உணர்வு இருக்கும் வரை கலைஞரை யாரும் மறக்க முடியாது. தி.மு.க.,வின் தொண்டர்களை கலைஞராக பார்க்கிறேன். சிறு ஓய்விற்காக மெரினா சென்றவர் தற்போது நீண்ட ஓய்விற்காக சென்றுள்ளார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அளிக்கப்பட்ட சிகிச்சை உபகரணங்களுக்கு பதிலாக அவரிடம், பேனாவும், காகிதங்களும் கொடுத்திருந்தால் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்து 100 வயதைத் தொட்டிருப்பார்." என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில், "பெரியார் படத்தில் நடித்த போது அவர் எப்படி பேசுவார் என்று எனக்கு நடித்துக்காட்டியவர் கலைஞர். அப்போது தி.மு.க., ஆட்சியில் இருந்ததால் எந்த தடையும் இல்லாமல் பெரியார் திரைப்படம் வெளியானது. கலைஞர் சமூக நீதிக்கான விடை.



நீங்கள் யார்? என்று அவரைக் கேட்கும்போது, மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்று கலைஞர் சொன்னதன் மூலம் பெரியார் கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதனை புரிந்து கொள்ள முடிந்தது. கலைஞர் இருந்தாலும் பயமுறுத்துகிறார். இல்லையென்றாலும் பயமுறுத்துகிறார். டெல்லி வரை அனைவரையும் பயமுறுத்துகிறார். ஏனென்றால் அவர் விட்டுச் சென்ற கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்பது தான்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ஸ்டாலின் தலைவர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவரே முதலமைச்சர். கலைஞர் தமிழர்களை எங்கும் விட்டுக்கொடுக்காதவர். மேலும், பெரியார் படத்தில் நடித்தற்கும், பெரியார் பாதையில் இருந்து விலக கூடாது என்பதற்காகவும் எனக்கு மோதிரம் அணிவித்தவர் கலைஞர். சாதியின் அடிப்படையில், பிறப்பின் அடிப்படையில் தமிழகத்தில் இருந்த பிரிவினைக்கு எதிராக இருக்கும் சுயமரியாதை, பகுத்தறிவு இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர். அதற்கு எதிராக உள்ளவர்களை கலைஞரின் கொள்கைகள் அச்சுறுத்திக் கொண்டே இருக்கும்." என்றார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், "கலைஞரை பிரதிபலிக்கக் கூடிய கதாப்பாத்திரத்தில் நடிக்க மணிரத்தினத்தின் இருவர் படம் வாய்ப்பு வந்தது. அது எனக்கு சவாலான பாத்திரமாக இருந்தது. தமிழை கற்றுக்கொள்ள துவங்கியது அங்கு தான். சுயமரியாதை, உரிமை, பண்பாடு ஆகியவற்றை கலைஞர் மூலம் உணர்ந்து கொண்டேன்.

கலைஞரின் இலக்கிய தமிழானது தென்றலாகவும், அரசியலானது தமிழ் புயலாகவும் இருந்தது. எனக்கு விருது வழங்காததால் தமிழக விருது அரசியல் விருது என ஆதங்கத்தில் பேட்டி கொடுத்தேன். இதனால், கலைஞர் என் மீது வருத்தம் கொண்டார். சில காலங்கள் கழித்து அவர் முன்னால் அவருடைய வசனத்தைப் பேசி நடித்தபோது, தற்போது சிவாஜி இல்லை இப்போது பிரகாஷ்ராஜ் உள்ளார் என கலைஞர் கூறிய போது பல விருதுகள் கிடைத்த மகிழ்ச்சியை அடைந்தேன்.

ஒரே நாடு, ஒரே மதம் என மாற்றிவிடத் துடிக்கும் சக்தியை பாதுகாத்திருந்த கலைஞரது மறைவினால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மத வாதத்தை எதிர்த்து பேச தொடங்கியிருக்கிறோம். ஆனால், இத்தனை நாள் கலைஞரின் நிழலில் பாதுகாப்பாக இருந்திருக்கிறோம் என்பதை இப்போது உணர முடிகிறது. கலைஞர் என்றால் சமூக நீதி தான் இனி நியாபகம் வரும்.

தேசிய நுழைவுத்தேர்வு எனும் நவீன தீண்டாமையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தேசிய பொறியியல் நுழைவுத்தேர்வை தமிழகத்தில் தடுத்தவர் கலைஞர். இலவசம் மக்களை நசுக்குகிறது என பொய்யான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கலைஞரின் இலவச திட்டங்கள் மக்களை உயர்த்தியுள்ளது." என்றார்.

இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், "பகுத்தறிவு பகலவன் மறைந்து விட்டது. அரசியல், கலைத்துறை, இலக்கியம் சார்ந்த துறைகளைச் சார்ந்தவர்கள் நொடிந்து போயுள்ளனர். சூரியன் மீண்டும் உதிக்கும் என நம்பிக்கை இருக்கிறது. தமிழ் திரைப்பட வரையறைகளை உடைத்தெறிந்து வந்திருக்கிறாய் என கலைஞர் என்னைப் பாராட்டியது மறக்க முடியாதது. தமிழும், கலைஞரும் இரண்டரை கலந்த அடையாளங்கள். மனிதாபிமான சிறந்த மனிதர் கலைஞர். கலைஞரைத் தவிர்த்து விட்டு தமிழ் சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடியது ஏன்? திரைப்பட கலைஞர்கள் ஏன் இதைத் தட்டி கேட்கவில்லை?" என்றும் கேள்விகளை எழுப்பினார்.

அவரைத் தொடர்ந்து நடிகர் நாசர் பேசுகையில், "சமூகத்தைச் சாடுகின்ற வரிகள் கொண்டது கலைஞரின் வசனங்கள். படத்தில் வசனங்கள் கடந்து அது வெளிப்படும் விதத்தையும் கவனமாக ஆய்வு செய்து கூர்ந்து கவனித்து சரி செய்பவர் கலைஞர்." என்றார்.

நடிகர் சிவகுமார் பேசுகையில், "தமிழ் சினிமாவின் அடையாளத்தை பராசக்தி திரைப்படம் மூலம் மாற்றி அமைத்தவர் கலைஞர். தனது கொள்கைகளை சாமர்த்தியமாக உலகத்திற்கு திரைப்பட வசனங்கள் மூலம் கொண்டு சென்றவர். அரசியல், கலை, இலக்கியத்தில் அவருடைய இடத்தை யாராலும் அசைக்க முடியாது." என்றார்.

தொடர்ந்து, பராசக்தி திரைப்படத்தில் இடம் பெற்ற சிவாஜி கணேசன் பேசிய வசனத்தை சிவகுமார் பேசினார். இது அரங்கில் இருந்த அனைவரையும் கரவொலி எழுப்பச் செய்தது.

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...