கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு, 4 ஆண்டுகளாக சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேர்த்து வைத்தப் பணத்தைக் கொடுத்த சிறுமியின் உள்ளத்தை பாராட்டி, ஆண்டுதோறும் புதிய சைக்கிள் வழங்குவதாக ஹூரோ சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு, 4 ஆண்டுகளாக சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேர்த்து வைத்தப் பணத்தைக் கொடுத்த சிறுமியின் உள்ளத்தை பாராட்டி, ஆண்டுதோறும் புதிய சைக்கிள் வழங்குவதாக ஹூரோ சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் இதுவரை பெய்த மழை மற்றும் வெள்ளத்திற்கே மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து, மழை பெய்து வருவதால் இயற்கையின் பிடியில் இருந்து மீண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, தனித் தீவுகள் போல காட்சியளிக்கின்றன. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வீடுகள், உடைமைகளை இழந்தவர்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தமிழகம், ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி உலக முழுவதிலும் இருந்து உதவும் நெஞ்சங்கள் அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா (8) என்ற சிறுமிக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்து வந்தது. 6-ம் வகுப்பு சென்ற பிறகே சைக்கிள் வாங்கித் தருவதாக அவரது தந்தை கூறியதால், அந்த சிறுமி கடந்த 4 ஆண்டுகளாக ஐந்து உண்டியல்களில் நாள்தோறும் தனக்கு கிடைக்கும் பணத்தை சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் வீட்டிற்கு கேரள மக்களுக்கு நிதி உதவிக் கேட்டு தன்னார்வு அமைப்பினர் சிலர் சென்றுள்ளனர். இதைப் பார்த்த சிறுமி அனுப்பிரியா, ஆசை ஆசையாக உண்டியலில் சேர்ந்த பணத்தை உடைத்து, அதில் இருந்த ரூ. 9,000-த்தை கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த அவர்களின் குடும்பத்தார், அந்த சிறுமியிடம் சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரண நிதிக்காக தந்து விட்டாய்..? பிறகு எப்படி சைக்கிள் வாங்குவாய்..? என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி “சைக்கிள் முக்கியமில்லை. வெள்ளத்தால் மிதக்கும் என் அண்டை மாநிலமான கேரளா தான் முக்கியம்” என பதில் கூறினார். இதைக் கேட்ட தன்னார்வர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதனிடையே, கேரளாவுக்கு உதவிய சிறுமி அனுப்பிரியாவின் உயர்ந்த செயலை பாராட்டிய ஹீரோ சைக்கிள் நிறுவனம், அச்சிறுமிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து ஹூரோ சைக்கிள் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டதுடன், சிறுமியின் முகவரியும் கேட்டுள்ளது.
