கோவை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி சக்திசேனா அமைப்பினர் விநாயகர் சிலையுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி சக்திசேனா அமைப்பினர் விநாயகர் சிலையுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 13-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகையையொட்டி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் 5 நாட்கள் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, பின்னர் நீர் நிலைகளில் கொண்டு சென்று கரைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அண்மையில் விதித்தது. குறிப்பாக, விநாயகர் சிலை அமைக்க விரும்பும் அமைப்பினர் ஒரு மாதத்திற்கு முன்பாக படிவம் 1-ல் சம்பந்தப்பட்ட சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர்களிடம் தடையில்லா சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். விநாயகர் சிலைகள் களி மண்ணால் மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும். சிலைகளின் உயரம் 10 அடிக்கு மிகாமல் (அடித்தளம் மற்றும் பீடம் உள்பட) அமைக்கப்பட வேண்டும்.
மேலும், கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது. பெட்டி வடிவ ஒலி பெருக்கிகளை பூஜையின் போது காலை மற்றும் மாலை வேளைகளில் தலா 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும். அரசியல் கட்சி மற்றும் மதச்சார்புள்ள இயக்கங்களின் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கக் கூடாது. சிலை ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்க அனுமதியில்லை. மத உணர்வை தூண்டும் வகையிலான அல்லது பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான கோஷங்கள் எழுப்பக் கூடாது. சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாள்களுக்குள் விசர்ஜனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த விதிகளை தளர்த்த வலியுறுத்தி சக்தி சேனா அமைப்பினர் விநாயகர் சிலையுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.