தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்தனர்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்தனர்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, அவரது கோபாலபுரத்து இல்லத்தில் வைத்து மருத்துவக் குழுவினரால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டுள்ளனர். மேலும், ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க., மூத்த தலைவர்களை சந்தித்து கருணாநிதியின் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கருணாநிதியின் உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கருணாநிதி உடல் நலம் தேற இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன். அவரது சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கருணாநிதி உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் தொலைப்பேசி மூலம் கேட்டறிந்தேன். தமிழக முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான அவர் குணமடைய கடவுளை வேண்டுகிறேன், எனக் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார்.
பா.ஜ.க., தேசிய பொதுச்செயலர் முரளிதரராவ் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது :- கருணாநிதி பூரணகுணமடைந்து விரைவில் உடல்நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன். அவரது அரசியல் அனுபவம் தமிழகத்துக்கும், நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியதாவது :- கருணாநிதி விரைவில் உடல் நலம்பெற்று மீண்டும் பழைய கம்பீர குரலோடு தமிழ் வசனங்கள் பேசி, தமிழகத்தில் மீண்டும் அரசியல் பணிகள் செய்ய நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன், என்றார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், எனக்கு அரசியல் குரு, அப்பா போன்றவர். அவர் குணமடைவார். அவர் குணமடைய வேண்டும், தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் குணமடைய வேண்டும். சீக்கிரம் சரியாகுங்கள் அப்பா, உங்கள் கர்ஜனையை கேட்க காத்திருக்கிறோம். எனக் கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் தெரிவித்திருப்பதாவது:- தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் மிகப்பெரும் மாற்றங்களுக்கும், சீர்திருத்தங்களுக்கும் அடித்தளமிட்டதோடு உலகத்தலைவர்களால் போற்றப்படும் தனி ஆளுமை கொண்டவர். அவர் பூரண குணமடைந்து நூறாண்டுகளை கடந்தும் நலமோடு வாழ வேண்டும், என்றார்.
நடிகர் விவேக் கூறியதாவது :- தி.மு.க., தலைவர் கருணாநிதி அரசியல்வாதி மட்டுமல்ல, நல்ல கலைஞர். மிகப்பெரிய ஆளுமை கொண்டவர். புலவர் பன்முகம் கொண்டவர். கருணாநிதியைப் பார்த்து இளைஞர்கள் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளவேண்டும். அவர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.