கோவை: சொத்து வரியை உயர்த்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: சொத்து வரியை உயர்த்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமீபத்தில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இந்த வரி உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டனங்கள் வலுத்தது. உயர்த்தப்பட்ட சொத்து வரியை வாபஸ் பெறக்கோரி வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, வாடகை குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்ட 100 சதவிகித வரியை 50 சதவிகிதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடுமலையில் நகர தி.மு.க., சார்பில், சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினா் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல, கோவையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் தி.மு.க., மற்றும் அதன் தோழமை கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது உடனடியாக சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் கருத்துரிமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு வால்பாறை நகர பொறுப்பாளர் த. பால்பாண்டியின் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசைக் கண்டித்தும், சொத்துவரியை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் தி.மு.க., நிர்வாகிகள் முன்னாள் நகர்மன்ற தலைவர் சத்தியவாணிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வம், சுதாகர், விஜயலட்சுமி, சூர்யபிரபா, இந்துமதி, கட்சி நிர்வாகிகள் செந்தில், மகுடீஸ்வரன், அம்பிகை சுப்பையா, முருகானந்தம், ஈகா.பொன்னுசாமி, சாகுல்அமீது, செல்வம், அண்ணாமலை, தமிழ்ச்செல்வன், வெங்கடேஷ், ஆகியோர் கலந்துகொண்டர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக்கின் தலைமையில் சொத்து வரியை 100% மேல் உயர்த்திய தமிழக அரசைக் கண்டித்து ஏடிசி சதுக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், தகவல் தொழிற்நுட்ப பிரிவு கே.ஏ. முஸ்தாபா, தெற்கு ஒன்றிய செயலாளர் பில்லன் மற்றும் நகர கழக நிர்வாகிகள், தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
