நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கேத்தரீன் நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று (செப்., 9) சுற்றுலா பயணியான மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் அந்த நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்த அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அங்குவந்த மீட்புப் படையினர் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், அங்கு மழை பெய்யத் துவங்கியதை அடுத்து தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலையில் தீயணைப்புப் படையினர், ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே, கேத்தரீன் நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்க பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.