கோவை கருமத்தம்பட்டியை அடுத்த வாய்க்கால்பளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி (63), இவரது மனைவி சுந்தராம்மாள் (58). இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், குமாரசாமி, சுந்தராம்மாள் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் விசைத்தறி நடத்தி வசித்துவந்தனர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக குமாரசாமி மற்றும் அவரது மனைவி உறவினர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. இதனால், நேற்று காலை குமாரசாமியை தேடி அவரது உறவினர்கள் பண்ணை வீட்டிற்கு சென்றனர். அப்போது குமாரசாமியும், சுந்தராம்மாளும் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறைனிர் சம்பவ இடத்திற்கு வந்து மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குமாரசாமிக்கு சொந்தமான விசைத்தறியில் பணிபுரிந்த ஈரோட்டை சேர்ந்த பெருமாள் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து, அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், குமாரசாமியிடம் வெலை செய்த போது ஊதியம் தர காலதாமதம் செய்ததாகவும், இதுகுறித்து கேட்டபோது குமாரசாமி தன்னை திட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். மேலும், இதை பார்த்த சுந்தரம்மாளையும் படுகொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் செல்போனை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார்.
தற்போது பெருமாளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.