மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை மாநகராட்சியில், டி.பி., ரோடு மற்றும் டி.வி., சாமி ரோட்டில், ரூ.5.47 கோடியில் 'மாதிரி சாலை' அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், மின் வழித்தடம், டெலிபோன் கேபிள், குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய், மழை நீர் வடிகால் என அனைத்து பணிகளுக்கும் ரோட்டின் ஓரத்தில் தனிப்பாதை ஏற்படுத்தவும், நடைபாதை, சைக்கிள் பாதை, சாலையோரம் பசுமை பூங்கா உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் எதிர்காலத்தில் எந்தவொரு தேவைக்கும் சாலையில் குழிகள் தோண்டாத வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என முடிவு செயற்பட்டது. இதற்கு, ரூ.5.47 கோடியில், மாதிரி சாலை' அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து நகராட்சி நிர்வாக ஆணையம் அனுமதி பெற்று, 'டெண்டர்' விடப்பட்டது.

பின்னர், இத்திட்டத்திற்கு முதற்கட்ட பணியாக தொலைதொடர்பு துறை மற்றும் மின்வாரிய ஒயர்களை ரோடு ஓரத்தில் மாற்றியமைக்க, தனி கட்டமைப்பு (டக்ட்) கட்டும் வேலையை, மாநகராட்சி துவக்கியது. ஆர்.எஸ்.புரம் குடிநீர் தொட்டி அருகே, 100 மீட்டருக்கு கான்கிரீட் கட்டமைப்பு அமைக்கப்பட்டு கவுலி பிரவுன் ரோட்டில் இருந்து டி.பி., ரோட்டுக்கு வரும் வழியில், 100 மீட்டருக்கு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், மின் புதை வடம் பதிப்பதற்கான மதிப்பீடு வழங்க மின்வாரியம் தாமதிப்பதால், 'மாதிரி சாலை' திட்டம் சிக்கலில் இருந்தது. அதேநேரம், ஒயர்களை மாற்றியமைக்க, பி.எஸ்.என்.எல் நிர்வாகம் தாமதிப்பதால் திட்டம் இழுபறியாகி வந்தது. தொலைதொடர்பு துறையும், மின்வாரியமும் ஒயர்களை மாற்றிக் கொடுக்காததால் அதன்பின் எந்த வேலையும் நடக்கவில்லை.
மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கை விடுத்ததும் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் மதிப்பீடு தயார் செய்து கொடுத்தது. மின் ஒயர்களை மாற்றித்தருமாறு மின்வாரியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு, தங்களது துறையில் நிதியில்லை என ஆரம்பத்தில் தட்டிக்கழித்தது. 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில் ஒதுக்கித்தருவதாக மாநகராட்சி தரப்பில் சொல்லப்பட்டதும் உத்தேசமாக ரூ.15 கோடி செலவாகும் என மின்வாரியத்தினர் தெரிவித்தனர். அதன் பின்னர் மாநகராட்சியே தற்போது இப்பணியை எடுத்து நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர் சசிபிரியா கூறுகையில், மாதிரி சாலை திட்டத்திற்கான பணிகள் மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கியது. ஆனால், மின் புதை வடம் பதிப்பதற்கான மதிப்பீடு வழங்க மின்வாரியம் தாமதித்ததால் பணிகள் சற்று தாமதமானது. தற்போது இதற்கு தீர்வு காணப்பட்டதால், பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், இப்பணிக்கு இடையூறாக இருக்கும் 'பழமையான மரங்களை வெட்டி வீழ்த்தாமல், புதிய திட்டத்தை உருவாக்கி மாதிரி சாலை திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். கண்டிப்பாக வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டால் 'ரிசர்வ் சைட்'டுகளில் மறுநடவு செய்யவும் முடிவு செய்திருக்கிறோம். மேலும் 'மாதிரி சாலை' குறித்து செயல்படுத்தப்படும் முழுத்திட்டம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு விரைவில் வெளியிடப்படும் என்றார்.
இது குறித்து, ஓசை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சையத் கூறுகையில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்திகேயன் தலைமையில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் டி.பி ரோடு மற்றும் டி.வி சாமி ரோட்டில், 'மாதிரி சாலை' அமைப்பது குறித்து பேசப்பட்டது. அப்போது, இப்பகுதியில் உள்ள நூறு வயதுக்கும் மேற்பட்ட மரங்கள் சாலையில் இருபுறமும் இருப்பதால் அவற்றை வெட்டாமல் 'மாதிரி சாலை' அமைக்க புதிய திட்டம் உருவாக்க முயற்சி எடுக்கப்படுகிறது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்' என்றார்.