கோவை இராமநாதபுரம் பகுதியில் ஜெம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நான்கு தளங்களைக் கொண்ட இந்த மருத்துவமனையில் குடல், கணையம், கல்லீரல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகள் ஏராளமானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வந்து செல்வர்.
இந்நிலையில், இன்று காலை சுமார் 7 மணியளவில் மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த யுபிஎஸ்-யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அங்கிருந்த மருத்துவ கழிவுகள் மீது தீ பட்டு மளமளவென எரியத் தொடங்கியது. மேலும் அந்த தீ அறையில் இருந்த குளிர்சாதன கருவியும் (ஏ.சி) தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து ஊழியர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மருத்துவமனை முழுவதும் வேகமாக பரவியது.

இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களை வெளியேற்றினர். பின்னர் அவசர சிசிக்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகளில் இருந்த நோயாளிகளை மீட்டு தயாராக இருந்த ஆம்புலன்சுகளில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இராமநாதபுரத்தில் பிரபலமான ஜெம் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
மருத்துவமனையில் தீ பற்றியவுடன் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. நோயாளிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேல் தெரிவித்தார்.