பத்து ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது - எடப்பாடி பழனிசாமி உறுதி

மதுரை மாநாடு குறித்த தேதியில் நடைபெறும் என்றும், மாநாட்டிற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் தடை இல்லாம் வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க நீதிமன்றம் உத்திரவு கொடுத்திருக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



கோவை: திமுகவின் 27 மாத கால ஆட்சியில் 2,73,000 கோடி கடன் வாங்கியது தான் மிச்சம் என்று அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் என்று கூறும் திமுகவினர், இனி கழிப்பறை கட்டினாலும் கூட திராவிட மாடல் என்பார்கள் என்று அவர் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,



மதுரையில் வரும் 20ம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்தமாநாடு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வியக்கும் வகையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் 15 லட்சம் தொண்டர்கள், நிர்வாகிகள்,பொதுமக்கள், பங்கேற்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டைக் கண்டு பயந்து நடுங்கிப் போய், என்ன செய்வது என்று தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர். இது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். இப்பொழுது இரண்டு ஆண்டுகள் உருண்டோடி 3 வது ஆண்டு நடக்கிறது. இந்த 3 ஆண்டு காலத்தில் என்ன முயற்சி எடுத்தார்கள்?. அதிமுக நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளும் எடுத்தது. அதிமுக எடுத்த அதே முயற்சிகளை தான் திமுகவும் செய்கின்றது.

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவிற்கு கூட எந்த நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை. இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக இணைந்தாவது தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய, இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆதரவை கேட்டு இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருக்க வேண்டும். அதையும் திமுக செய்யவில்லை.

காவிரியில் 10 டி.எம்.சி வரை தண்ணீர் கொடுப்பதாக கர்நாடக துணைமுதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பதற்காக பெங்களூர் சென்ற முதல்வர் தமிழகத்தைப் பற்றியும் விவசாயத்தைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார். நானும் டெல்டாகாரன் என்று சொன்னார். விவசாயம் காய்ந்து போனது.

மாநிலத்தின் பிரச்சனை என்று வந்த பொழுது எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால் தான் கூட்டணியில் அங்கம் வகிப்பேன் என்று கெஜ்ரிவால் சொன்னார் அவர் ஆண்மகன். வேண்டியதை கேட்டு பெறுகிறார். சரியான முறையில் செயல்பட்டார். அவரை போல் திமுக செயல்பட வில்லை.

காவிரி தீர்ப்புப்படி தண்ணீரை முழுமையாக திறந்து விட்டால் தான் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று சொல்லி இருக்க வேண்டும். அதை ஸ்டாலின் செய்யவில்லை. கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் வந்து வரவேற்ற போது ஐந்து நிமிடம் அவரிடம் பேசி இருக்கலாம். மக்களைப் பற்றி கவலைப்படாமல், ஆட்சி அதிகாரம் மட்டுமே ஸ்டாலினுக்கு முக்கியமாக இருக்கின்றது.



மகளிர் கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் நடைமுறைப்படுத்தி ஒன்றரை ஆண்டு கழித்து தற்பொழுது அதற்கு புதிய பெயர் வைத்திருக்கிறார்கள்.

மதுரை மாநாடுக்கு தடை கேட்டு வழக்கு போடப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, வழக்கு தொடுப்பதற்கு என நிறைய பேர் இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது.

ஏற்கனவே காவல்துறை அனுமதி வாங்கி இருக்கிறோம், மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் தேவையான பாதுகாப்பு கேட்டு பெற்று இருக்கிறோம். மாநாட்டுக்கு தேவையான பாதுகாப்பு, வாகனங்கள் தடை இல்லாமல் வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்திரவு கொடுத்திருக்கிறது.

2010 டிசம்பரில் நீட் தொடர்பான உத்திரவு போடப்படுகின்றது, நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதும் திமுக தான் எனவும், இப்போது அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதும் திமுக தான் என தெரிவித்த அவர், நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் முதலி்ல் தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக தான் என தெரிவித்தார்.

யாராவது ஒருவர் மீது பழி செலுத்த வேண்டும் என்பதற்காகவே உதயநிதி பேசுகிறார்.



ஆளுநர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மத்திய அரசு சட்டங்களின் பெயர்களை இந்தி, சமஸ்கிருத்ததில் மாற்றி இருப்பது குறித்து முழுமையான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. தகவல் கிடைத்தவுடன் அது குறித்து பேசுகிறோம்.

நீட் விவகாரத்தில் ஆளுநர் பற்றி மட்டுமே. கேள்வி கேட்கின்றீர்கள் ? உச்ச நீதிமன்றம் குறித்து கேட்க மாட்டேன் என்கிறீர்களே என செய்தியாளர்களிடம் கேட்ட எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக என்ன செய்ததோ அதைத்தான் திமுக செய்கின்றது எனவும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு திமுக என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி, சட்ட நுணுக்கத்தின் மூலமாக உச்சநீதிமன்றத்தை நாடி அதற்கு தீர்வு காண வேண்டும்.

திமுக அரசு அதை செய்யாமல் சாக்குப் போக்கு சொல்லி மக்களை ஏமாற்றுகிறது. இதில் முதன்மையானவர் முதலமைச்சர். அவரை விட முதன்மையானவர் அவரது புதல்வர்.

நீட்டில் கையெழுத்திடவே மாட்டேன் என ஆளுநர் சொல்லி வருவது குறித்த கேள்விக்கு கையெழுத்து போடுகின்றாரோ? இல்லையோ ? எதற்கும் தில் வேண்டும் எனவும், நான் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு எப்படி வாங்கி கொடுத்தேன். அதிகாரத்தை வைத்து நான் என்ன செய்தேன் உங்களுக்கு அதிகாரம் இருக்கின்றதே. அதை வைத்து செய்ய வேண்டும். எந்த அதிகாரத்தையும் அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். மக்களை ஏமாற்றி ஆட்சியில் தொடரவே விரும்புகின்றனர். பத்தாண்டுகள் ஆனாலும் நீட் தேர்வை இவர்களால் ரத்து செய்ய முடியாது. பேசுவது அத்தனையும் பொய் என கடுமையாக சாடினார்.

நீதிமன்றத்திற்கு எதிராக ஒரு மாநில அரசால் செயல்பட முடியுமா? எங்களை கேள்வி கேட்கின்றீர்கள், நீங்கள் பதில் சொல்லுங்கள் என செய்தியாளர்களிடம் கேட்ட எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த ஆட்சியில் அதுவும் கைவிடப்பட்டது. 

அதிமுக உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததால் இந்த ஆண்டு 606 பேர் தேர்வாகி இருக்கின்றனர். திமுகவின் 27 மாத கால ஆட்சியில் 2,73,000 கோடி கடன் வாங்கியது தான் மிச்சம். கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. 

இதில் எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கின்றனர். இனி கழிப்பறை கட்டினால் கூட திராவிட மாடல் ஆட்சி என்று சொல்வார்கள். அது மட்டும் தான் பாக்கி எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...