கோவையில் சட்டவிரோதமாகவும் இயற்கைக்கு தீங்கிழைக்கும் வகையிலும், அதிக சத்தத்துடனும் இயங்கும் கல்குவாரிகளை மூட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை: தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், தருமபுரி , கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 9,000 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன.
குறிப்பாக கோவை மாவட்டத்தில், மதுக்கரை, அன்னூர், சோமனூர், காரமடை, பேரூர், செட்டிபாளையம், சூலூர், மற்றும் பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் 120க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்குகின்றன.
இந்த கல்குவாரிகளில் இருந்து, கட்டுமானத்துக்கான அடிப்படை தேவைகளாக உள்ள ஜல்லி கல், பெருங்கல் மற்றும் எம் சாண்டு மணல் உள்ளிட்டவை இங்கிருந்தே பெறப்படுகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் கல் குவாரிகளில் 1 சதவிகிதம் மட்டுமே முறையாக இயங்குவதாகவும் மற்ற கல் குவாரிகள் விதியை மீறியும், சட்ட விதிகளுக்கு புறம்பாகவும் இயங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பசுமை போர்த்திய மலையில் கல்குவாரிகளை அமைக்க கூடாது. அனுமதி அளிக்கப்பட்ட குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டுமே கற்களை வெட்டி எடுக்க வேண்டும். கற்களை வெட்டி எடுக்க நாணல் வெடி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
இதேபோல், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கல்குவாரிகள் இயங்க வேண்டும். தொழிற்சாலை பகுதியில் 75 டெசிபல், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் என்றால் 55 டெசிபல் சத்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் இயங்குகின்ற கல் குவாரிகளில் வெடிக்க நாணல் வெடிமருந்து பயன்படுத்தப்படாமல், அதிக சத்ததையும் நிலஅதிர்வையும் ஏற்படுத்தும் சட்ட விரோதமான வெடிமருந்துகளை பயன்படுத்துவதாக கூறப்படுகின்றது.
இதனை கண்டுகொள்ளாமல் இருக்க இரவில் கல் குவாரிகளை சட்டவிரோதமாக இயக்குவதாகவும், அப்போது, பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட வெடி மருந்துகளால் ஏற்படும் 2 முதல் 3 ஹெக்டேர் நில அதிர்வால், பாறைகள் சரிந்து உயிர்ச் சேதமும் ஏற்படுகின்றன.
மேலும், சட்ட விதிகளின் அடிப்படையில் கல் குவாரிகளின் உரிமையாளர்கள் 500 முதல் ஆயிரம் மரங்களை நட வேண்டும். ஆனால் இரண்டு, மூன்று முறை உரிமம் புதுப்பித்த நிலையில் மரங்களை நடாமல் கல் குவாரி உரிமையாளர்கள் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் இதுவரை கல்குவாரிகளால் 1 கோடி மரங்கள் நடப்படாமல் இருக்கின்றன.
இந்நிலையில், சட்டத்துக்கு புறம்பாகவும் விதிகளை மீறியும் இயற்கையை சிதைத்து வரும் கல் குவாரிகளை மூட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.