ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி என்ற தேசிய கொடி மையத்தை வானதி சீனிவாசன் துவக்கி வைத்து, சுதந்திர தினம் வரை இம்மையம் செயல்படும் என்றும், இலவசமாக இல்லாமல் விருப்பமான பணத்தை செலுத்தி தேசிய கொடியை பெற்று கொள்ளலாம் என தெரிவித்தார்.
கோவை: கோவை பாஜக அலுவலகத்தில், தேசிய கொடி மையத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.
75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு சார்பில் சிறப்பாக கொண்டாட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி என்ற தேசிய கொடி மையத்தை வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். இம்மையம், சுதந்திர தினம் வரை செயல்பட உள்ளது. இலவசமாக இல்லாமல் விருப்பமான பணத்தை செலுத்தி தேசிய கொடியை பெற்று கொள்ளலாம்.
இதுகுறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் என்றும், ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைவரது வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தேசிய கொடி ஏற்றுவது போன்றவற்றில் விதிமுறைகளின் படி சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி அனைத்து துணிகளிலும் தேசியக் கொடியைத் தயாரிக்கலாம் மாலை ஆறு மணிக்கு மேலும் தேசியக் கொடியைப் பறக்க விடலாம் என சில சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாகவும், தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பங்களின் மேல் எவ்வித சின்னங்களும் இருக்கக் கூடாது எனவும், திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் அனைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், அரசு இயக்கி வரும் ஜெம் வெப்சைட்டிலும் 2 கோடி தேசியக் கொடிகளுக்கு ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கோவை மாவட்டத்திலும் தேசியக் கொடி ஏற்றுவதற்கு பாஜக சார்பில் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், தெற்கு சட்டமன்ற அலுவலகத்திலும் கொடி விற்பனை செய்ய உள்ளதாகவும், இலவசமாக இல்லாமல் விருப்பமுள்ள பணத்தை செலுத்திக்கொண்டு தேசியக் கொடியைப் பெற்றுக் கொள்ளும்படி ஏற்பாடுகள் செய்யப்படும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஒரு கோடி தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பாஜக சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், ஆண்கள் சார்பில் இருசக்கர வாகன பேரணியும் பெண்கள் சார்பில் வந்தேமாதரம் பேரணியும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அட்டுக்கல் பிரச்சனை குறித்து பேசிய அவர், அப்பகுதியில் ஆதரவற்றவர்களுக்காக இல்லம் நடத்துகின்றோம் என்ற பெயரில் நல்ல மனநிலையில் உள்ளவர்களையும், வாகனத்தில் ஏற்றிச்சென்று மொட்டை அடித்து சட்டவிரோதமாக செயல்பட்டு உள்ளதாகக் கூறிய அவர், பாஜக சார்பில் இது குறித்து விசாரித்த பொழுது அந்த கட்டிடம் சீல் வைக்கப்பட்ட கட்டிடம் என தெரிய வந்ததாகவும், அதனைத் திறப்பதற்கு திமுக நிர்வாகிகள் ரவி உட்பட சிலர் உதவி இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதுதான் எங்களின் பயமாக உள்ளதாகவும் தெரிவித்தார். இப்பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூறினார். மேலும், மனிதக் கடத்தல் நிறுவனங்களுக்கு மறைமுகமாக திமுக நிர்வாகிகள் உதவுகிறார்கள் எனவும் விமர்சித்தார்.
எனவே, அந்நிறுவனத்தினரைக் கண்டுபிடிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும், இப்பிரச்சினை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் "தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்" என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அந்த போஸ்டரில் என்ன தப்பு இருக்கிறது? என பதிலளித்தார். மேலும், தேசிய கொடியை கோவில்கள் கல்வி நிறுவனங்களிலும் ஏற்றலாம் எனவும், திமுக காங்கிரஸ் ஆகிய அனைத்து கட்சி கொடி கம்பங்களிலும் சட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு கொடியை ஏற்றலாம் எனவும் தெரிவித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து ஒவ்வொரு முறையும் பேசி வருவதாக தெரிவித்த அவர், கோவை பொறுப்பு அமைச்சர் ஒவ்வொரு முறையும் கோவைக்காக 200-கோடி ரூபாய் உள்ளது என்று கூறுகிறார். அது என்ன ஆனது? கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி போல 200-கோடி உள்ளது என தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் மேயர் ஆகியோர் பொறுப்பேற்ற பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என தெரிவித்த அவர் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என்று நிலை நிலவி வருவதாக தெரிவித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் குளங்களின் அளவு ஆகியவை குறைக்க பட்டுள்ளதாகவும், நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு அவ்வாறு பாதிப்பு ஏற்படுமாயின் மத்திய அரசிடமும் இது குறித்துப் பேசுவதாக பதில் அளித்தார்.
இவ்வாறு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இந்த துவக்க விழாவில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமன் உட்பட பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.