கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகள் மருத்துவத்தில், சிறப்பாக பணியாற்றிய கோவையை சேர்ந்த. ராஜேந்திரனுக்கு, புதுச்சேரி குழந்தை மருத்துவ குழுமம் மற்றும் இந்திய குழந்தை மருத்துவ குழுமம் (புதுச்சேரி) சார்பில் விருது வழங்கி கௌரவிப்பு.
கோவை: புதுச்சேரி குழந்தை மருத்துவ குழுமம் மற்றும் இந்திய குழந்தை மருத்துவ குழுமம் (புதுச்சேரி) சார்பில், ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர்களை கௌரவிக்கும் வகையில், சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு "NSVMC' Medal" என்ற பெயரில் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இவ்வாண்டு முதல் வழங்கப்படவுள்ள இந்த விருதானது, மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுப் பெற்ற மருத்துவர்கள் -- நளினி, சீனிவாசன், விஷ்ணு பகத், மகாதேவன், திருமதி சிதம்பரம் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயரின் முதல் எழுத்துக்களை குறிக்கும் விதமாக "NSVMC ' பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகள் மருத்துவத்தில், குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, குழந்தைகள் மருத்துவத்தில் பல்வேறு அதிநவீன சிகிச்சை முறைகளை செயல்படுத்திய மருத்துவர்களின் பட்டியலை தேர்வு குழுவினர் தயார் செய்தனர்.
இந்த பட்டியலில், தமிழ்நாடு மட்டுமின்றி யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றும் பல்வேறு குழந்தைகள் மற்றும் சிசு நல சிறப்பு மருத்துவர்கள் குறித்த விபரங்களை ஆராய்ந்த வல்லுநர் குழுவினர், இவ்வாண்டுக்கான "NSVMC' Medal 2022, விருதுக்கு கோவையை சேர்ந்த மருத்துவரை தேர்வு செய்துள்ளனர்.
அதன்படி, கோவையை சேர்ந்த குழந்தைகள் மற்றும் சிசு நல சிறப்பு மருத்துவர் டாக்டர். க.இராஜேந்திரன் "NSVMC' Medal 2022" என்ற விருதை பெற்றுள்ளார்.
கொரோனா பேரிடர் காலத்தில், 21,300 மருத்துவர்கள் மற்றும் 38,400 செவிலியர்களுக்கு பயிற்சி அளித்த மருத்துவருக்கு விருது..!
இந்திய குழந்தை மருத்துவ குழுமம் தமிழ்நாடு கிளையின், செயலாளராக உள்ள மருத்துவர். க. ராஜேந்திரன், கொரோனா பேரிடர் காலத்தில், தமிழ்நாடு முழுவதும் 13,500 மருத்துவர்கள், 7,800 முதுநிலை கல்வி மருத்துவ மாணவ,மாணவியர் மற்றும் 38,400 செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் நலனுக்காக தமிழில் "குழந்தைகள் நலம்", "தாய்- சேய்க்கான சத்தான உணவுகள்" உள்ளிட்ட புத்தகங்களை எழுதி உள்ள இவர், புத்தகங்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் பணத்தை (இதுவரை 11 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை) ஏழை குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்காக மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் சிகிச்சைக்கும் நன்கொடையாக வழங்கி வருகிறார்.
தற்போது புதுச்சேரி குழந்தை மருத்துவ குழுமம் சார்பில் விருது வழங்கிய போது கிடைத்த பத்தாயிரம் ரூபாய் பரிசு தொகையையும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிகிச்சைக்கு மருத்துவர். ராஜேந்திரன் வழங்கியுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.