கோவை அவிநாசி சாலை அண்ணா சிலை அருகே கொடிசியா தொழிற்பூங்கா அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அமைதியான முறையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கொடிசியா நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சூலூர் பகுதி கள்ளப்பாளையம் கிராமத்தில் கொடிசியா நிர்வாகம் சார்பில் 140-ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய தொழிற்பூங்கா கட்டப்பட்டு வருகிறது. தொழிற்பூங்கா கட்டுவதற்கு அங்குள்ள நீர் நிலையை ஆக்கிரமித்தும், அந்த நீர் நிலைக்கு வரக்கூடிய நீர் வழித்தடத்தை அழித்தும், இந்த தொழிற்பூங்கா கட்டப்பட்டு வருகிறதாகத் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், தொழிற் பூங்கா நிறுவுவதற்காக நகர ஊரமைப்பு துறை இயக்குநரிடம் உண்மை தகவல்களை மறைத்தும், பொய்யான தகவல்களை வழங்கியும், டிடிசிபி அனுமதி பெற்றுள்ளதாகவும், விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், கோவை அவிநாசி சாலை அண்ணா சிலை அருகே கொடிசியா தொழிற்பூங்கா அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அமைதியான முறையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, போலிசாரும், மாவட்ட நிர்வாகமும், கொடிசியா நிர்வாகிகளும் போராட்டத்தை கைவிடும்படி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், விவசாயிகள் நீர் வழித்தட ஆக்கிரமிப்பு மற்றும் விவசாய நிலத்தில் மின் கம்பிகளை போடும் திட்டத்தையும் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். இது தொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினர் சிவக்குமார், நீர் நிலைக்கு போகக்கூடிய நீர்வழிப்பாதையை அழித்து கொடிசியா நிர்வாகம் டிடிசிபி அப்ரூவல் வாங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த செயல் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல் என்றும் நீர் நிலையை அழிக்கக்கூடாது நீர் நிலையை காப்பாற்ற வேண்டும் என பல தீர்ப்புகள் உள்ளது எனவும், ஆனால் நீர் நிலையை அழிக்கும் இந்தப் நிர்வாகங்களுக்கு ஆதரவாக வருவாய்த்துறையும், உள்ளாட்சி நிர்வாகமும் செயல்பட்டு நீர் நிலையை அழித்துள்ளனர் என தெரிவித்தார்.