கோவை கிரீன் லீக் அமைப்பின் சார்பில் நேற்று முன் தினம் பல்வேறு பள்ளிகளுக்கு பசுமை வளாக விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை சூழல் பாதுகாப்பு பணிகள் மற்றும் அந்நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் விழிப்புணர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது.

நேற்று முன் தினம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிரீனஸ்ட் கேம்பஸ் விருது ராமசுவாமி நகரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி இடைநிலைப் பள்ளி, பீளமேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, புளியகுளம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.

தனியார் பள்ளியான வெஸ்ட்டர்ன் கார்ட்ஸ் சர்வதேசப் பள்ளி மற்றும் யுவபாரதி பப்ளிக் பள்ளி, கேஎஸ்ஐஆர்எஸ் சர்வதேசப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது. கேம்போர்டு சர்வதேசப் பள்ளி, எஸ்என்எஸ் ஆகிய பள்ளிகளுக்கு சிறப்பு அங்கீகார விருது வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சுமார் 1 லட்சத்திற்கும் மேல் மரங்களை நட்டு வளர்த்தமைக்காகவும், பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சென்று மரம் நடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய யோகநாதன் இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நீர்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கிருஷ்ணாபிள்ளைக்கு விருது வழங்கப்பட்டது. இவர் சைக்கிளின் மூலம் மூன்று முறை தமிழகத்தில் இருந்து தில்லி வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
தொடர்ந்து, கிருஷ்ணா கிருஷ்ணசாமிக்கு மாடித்தோட்டம் மற்றும் சமையல் அறைத் தோட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அனைவருக்கும் விருது வழங்கி பேசுகையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது பள்ளியில் பசுமையான சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மாணவர்களின் மூலமாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாநகராட்சி சார்பாகவும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கோவை கிரீன் லீக் மூலம் பசுமையினை உருவாக்குவது மட்டும் திட்டம் அல்ல. பசுமையை சிறந்த முறையில் பாதுகாப்பதிலும் கவணம் செலுத்தி வருகிறது.
கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டிக்கான திட்ட வரைவில் உள்ளது. இதற்காக மாநகராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்தல், கழிவுகளை அகற்றுதல், அழிந்து வரும் ஏரிகளை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாய்கான் லம் கேஜிஎல் திட்டத்தை சாத்தியமாக்க உள்ளது. கோவை பசுமை லீக் ஒரு நல்ல முயற்சி ஆகும்" என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சங்கீதா சுபாஷ், சரவணன் சந்திர சேகர், கனகராஜ் தங்கவேல் ஆகியோர் பங்கேற்று குப்பைகளை பயனுள்ளதாக மாற்றுவது குறித்தும், பசுமை போர்வை மற்றும் இயற்கை வேளாண்மை ஆகியவற்றைக் குறித்து சிறப்புரையாற்றினர்.