மேட்டுப்பாளையம் அருகே நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக பலியானார்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக பலியானார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கோபானாரி அரக்கடவு மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பன்(45). இவர் நேற்று வழக்கம் போல் விவசாய கூலி பணிக்காக அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார். பணி முடித்து மாலை அரக்கடவுக்கு இரு கிராமங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த ஒற்றை யானை ராஜப்பனை துரத்தியது. இதில் பீதி அடைந்த ராஜப்பன் காட்டுப்பாதை வழியாக ஓடினார். ஆனால், அவரை விடாமல் துரத்திய காட்டு யானை ராஜாப்பனை துதிக்கையால் தூக்கி வீசியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரவு வெகு நேரம் ஆகியும் ராஜப்பன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் வனத்துறை உதவியுடன் காட்டுப்பகுதிக்குள் சென்று அவரைத் தேடிச் சென்றனர். அப்போது காட்டு யானை தாக்கி அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, அவரது உடலை இன்று காலை மீட்ட பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்போது யானைகள் வலசைக் காலம் நடைபெறுவதால் அவற்றின் நடமாட்டம் கோவை வனக்கோட்டத்தில் அதிக அளவில் இருந்து வருவதாகவும் கர்நாடகா மலைக்காடுகளில் இருந்து யானைகள் கேரளா வனத்தினை நோக்கி வருவதால் யானைகள் ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வனப்பகுதிகளில் நடமாடுவதைத் தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.