மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் இட்லி சாப்பிட்டார் என கூறியது பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியன்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, சுமார் 70 நாளுக்கும் மேலாக அம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில், அவ்வப்போது தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை ஜெயலலிதாவிற்கு அளித்து வந்தனர்.

இதனிடையே, "ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், காபி குடித்தார், சிரிச்சு சிரிச்சு விளையாடினார்" என அப்போதைய பொருப்பு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, ஏராளமான அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என ஜெயலலிதாவின் விசுவாசிகளாக கருதப்பட்ட அதிமுக-வின் அனைத்துத் தரப்பினரும் தொலைக்காட்சி வாயிலாக பேட்டியளித்தனர்.
ஆனால், 2016 டிசம்பர் 5ம் தேதியன்று இரவு ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தர்மயுத்தத்தை தொடங்கிய ஓ.பன்னீர் செல்வம் வைத்த கோரிக்கைகளில் முதன்மையானது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை தேவை என்பதுதான். தொடர்ந்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று கூறி இரு அணிகளும் கடந்த மாதம் இணைந்தன.
மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உடல் நலம் முன்னேறிவருகிறது என்று கூறிய பன்னீர்செல்வம் தரப்பினர் திடீரென அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அணிகள் இணைப்பிற்கு முன்னர் கூட பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
அணிகள் இணைப்புக்கு பின்னர் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அனைவரும் "அது வேற வாய், இது நார வாய்" என்பது போல் மக்கள் உமிழும் அளவிற்கு தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, மக்களையே ஏமாற்றும் வகையில் பேசி வருவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
அவ்வாறு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது "அவர் இட்லி சாப்பிட்டார்" எனக் கூறியது பொய் என மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் அவரை நேரில் பார்க்கவில்லை. எங்களை பார்க்க சசிகலா குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் அப்போது பொய் சொன்னோம், அதற்காக இப்போது மன்னிப்பு கேட்கிறோம். விசாரணை கமிஷனில் ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் ஏன் சந்திக்க விடலில்லை என்ற மர்மம் வெளிவரும் என்று பேசியுள்ளார்.
அமைச்சர்கள் எல்லோரும் சொல்லிவைத்தாற் போல் ஜெயலலிதாவை பார்த்ததாக கூறிவந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு, மற்ற அமைச்சர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, ''யாரும் பார்க்கவில்லை,'' என சத்தியம் செய்யும் அமைச்சர் சீனிவாசன், சசிகலா அணியில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சியில், ''ஜெயலலிதாவை அமைச்சர்கள் மருத்துவமனையில் பார்த்தோம்'' என சத்தியம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.