மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவு தேர்வு அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மாணவர்களும், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஜி.எஸ்.மணி என்ற வழக்கறிஞர், அனிதாவின் மரணத்தை அடுத்து, நீட் உத்தரவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. நீட் விவகாரத்தில் உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது இது. அனிதாவின் மரணத்தை அடுத்து நடக்கும் இத்தகைய போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இதில், உடனடியாக உச்சநீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர வழக்காக இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. உடனடியாக வழக்கை விசாரிக்கும் அளவுக்கு என்ன நடந்து விட்டது என்று கூறி அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார். பட்டியலில் உள்ள படி மனு விசாரணைக்கு வரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி இந்த வழக்கு பின்னர் ஒரு நாளில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.