தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
பட்டாசுக்கடைக்கான உரிமம் பெற கடந்த ஜீலை மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பட்டாசுக்கடை அமைப்பதற்கான உரிமம் பெற விருப்பமுடையவர்கள் மாநகராட்சியிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால், மாநகராட்சியிடம் இருந்து அனுமதி பெற காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.
இதனால், பட்டாசுக்கடை அமைப்பதர்கான உரிமம் பெற வரும் 11-ம் தேதி வரையில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது :-
வரும் 11-ம் தேதி மதியம் 2 மணி வரை பட்டாசுக்கடை அமைப்பதற்கான உரிமம் பெற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலக்கப்பட்டு, காவல்துறையின் ஆய்வுக்கு பிறகே உரிமம் வழங்கப்படும்.
வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுத்துறை அறிவுரைப்படி, சாலையோரங்களில் பட்டாசுக்கடைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட மாட்டாது. குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.