கோவையின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணிப்பதா? - ரயில்வேதுறைக்கு எம்பி பி.ஆர்.நடராஜன் கண்டனம்!

கோவை மாவட்ட மக்களின் கோரிக்கைகளை, மத்திய அரசும், ரயில்வே துறையும் தொடர்ந்து புறக்கணிக்கிறது. எளிய மக்களின் நிலையை உணராமல், அதிக கட்டணம் உள்ள வந்தே பாரத் போன்ற ரயில்களை, தாங்கள் நினைப்பதை செய்ய வேண்டும் என்கிற முனைப்போடு ஒன்றிய பாஜக அரசு இயக்குகிறது என கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட மக்களின் கோரிக்கைகளை, ஒன்றிய அரசும், ரயில்வே துறையும் தொடர்ந்து புறக்கணிப்பதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை நகரம் ஸ்மார்ட் சிட்டி என அடையாளப்படுத்தப்பட்டிருப்பதால், மக்களுக்கான அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. கோவை - பெங்களூரு இடையேயான இரவு நேர ரயில் சேவை வசதி 2007 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது.

வர்த்தகர்கள், வியாபாரிகள், தொழில்முனைவோர்கள், ஐ.டி ஊழியர்கள், மாணவர்கள், பெங்களூருக்கு வேலைக்கு செல்லும் சாதாரண பொதுமக்கள் ஆகியோரின் வசதிக்காக இந்த இரவு நேர பெங்களூர் கோவை ரயில் விட வேண்டும்.



2007 ஆம் ஆண்டு, அப்போதைய ரயில்வே துறை அமைச்சர், கோவை - பெங்களூரு இரவு நேர ரயில் சேவை வசதியை புதிதாக அறிவித்தார். அது அறிவிப்போடு மட்டுமே இருக்கிறது. ஒன்றிய பாஜக அரசும், ரயில்வே துறையும் இதுவரையில் இதற்கான எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை.

கோவை மாவட்ட மக்களின் ரயில்வே துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டாலும், அதுகுறித்த எந்த அக்கறையும் இல்லாமல் ரயில்வே துறை உள்ளது. அதே நேரத்தில், ஏற்கனவே இருந்த பல ரயில் சேவைகளையும் ஒன்றிய அரசு பறித்து வருகிறது.

உதாரணமாக, கோவை - சேலம் பயணிகள் ரயிலை, இருப்பு பாதை பராமரிப்பு என்ற பெயரில் மாத கணக்கில் நிறுத்தி வைத்துள்ளது. இதேபோன்று, டாலர் சிட்டி என அழைக்கப்படுகிற திருப்பூரில் இருந்து சென்னைக்கு டாலர் சிட்டி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

கோவை - சென்னை - எக்மோர் ரயில் சேவை வழி போத்தனூர், பொள்ளாச்சி வழியாக ரயில்சேவை, தூத்துக்குடி, ராமேஷ்வரம் ரயில்சேவை, கோவையிலிருந்து சென்னை எக்மோருக்கு பொள்ளாச்சி வழியாக மேலும் ஒரு புதிய ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் அனைத்தும் கிடப்பில் இருக்கிறது.

வட கோவை ரயில் நிலையத்தில், இரவு நேர ரயில்கள் நிற்காமல் செல்கிறது. இதனால், ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, காந்திபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதி மக்களுக்கு பெரிய இடையூறாக உள்ளது. ஆகவே, இரவு நேர ரயில்கள் வடகோவை ரயில்நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அவை எதுவும் ஒன்றிய அரசோ, ரயில்வே துறையோ காதில் போட்டு கொண்டதாகவே தெரியவில்லை.

அதேநேரத்தில், வந்தே பாரத் ரயில்களை இயக்குவதில் ஒன்றிய மோடி அரசு முனைப்பு காட்டுகிறது. எளிய மக்களுக்கு எந்த விதத்திலும், பயணிக்க முடியாத அளவிற்கு அபரிமிதமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில், கோவையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ரயில்களில், முன்பதிவற்ற ஜெனரல் பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய மோடி அரசின் திட்டங்கள் எல்லாம் மக்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையாக இருக்கிறது.

ஏழை எளிய உழைப்பாளி மக்களின் நலன் சார்ந்த எந்த கோரிக்கைகளையும் செவிமடுப்பதாக இல்லை.

ஆனால், எதிர்க்கட்சிகள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்கிற திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரத்தை பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர். பாஜகவினரின் இந்த நாடகத்தை கோவை மக்கள் நன்கு அறிந்தே உள்ளனர்.

கோவை மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், மக்களை திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...