பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஜனவரி 23

பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் மாநகரப் பேருந்துகளின் கட்டணத்தை திடீரென்று கடந்த 19.1.2018 அன்று இரவு உயர்த்தி, 20.1.2018 அன்றே இரவோடு இரவாக அமலுக்கு வந்திருப்பதால், இந்த அதிபயங்கரத் தாக்குதலின் காரணமாக, வாங்கும் சக்தியோ தாங்கும் சக்தியோ எதுவுமற்ற அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி உறைந்து போயிருக்கிறார்கள். 

சிறு வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், பெண்கள் உள்ளிட்ட கூலித் தொழிலாளர்கள், மருத்துவமனை செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் அனைவரும் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் ஏழை, எளிய நடுத்தர மக்கள் முன்வந்து நடத்தும் தன்னெழுச்சியான போராட்டங்களின் வாயிலாக வெகுமக்களின் கொந்தளிப்பையும் கோபத்தையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் உணர்ந்திருப்பீர்கள் என்று நான் எண்ணுகிறேன்.

“அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது” என்ற நிலைப்பாட்டை எடுத்து அதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று தடை பெற்ற இந்த அரசு, போக்குவரத்துக் கட்டண உயர்வு என்ற அரசின் கொள்கை முடிவு தொடர்பாக ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 24.11. 2017 அன்று தெரிவித்த கருத்தின் (பீபீ) அடிப்படையில் 3,600 கோடி ரூபாய் அளவிற்கு கட்டண உயர்வை அறிவித்திருப்பது இந்த அரசின் இரட்டை வேடத்தையும் கபட நாடகத்தையும் காட்டுகிறது. அதுமட்டுமின்றி கட்டண உயர்வுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ள வேறு காரணங்கள் அனைத்துமே வழக்கமான அலுவலக நடைமுறைக் காரணங்கள் என்பது மட்டுமல்ல. இப்படி ஒரு கடுமையான கட்டண உயர்வு இன்றியே, சாமர்த்தியமாகத் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகள் தான் என்பதை அரசு நிர்வாகத்தைக் கையாளும் வல்லுநர்கள் அனைவரும் அறிவர்.

பேருந்துகளை இயக்குவதற்கான டீசல் செலவு 28.7 சதவீதம் என்று 2017-2018ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, பராமரிப்பிற்காகவெறும் 3 சதவீதம் தான் செலவாகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் போக்குவரத்திற்கான இன்றியமையாத சேவையில் இருக்கும் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் டீசல் விலை உயர்வு, பராமரிப்புச் செலவு என்ற திசைதிருப்பும் காரணங்கள் எல்லாம் திடீர் பேருந்துக் கட்டண உயர்வுக்காக சிரமப்பட்டுத் “தோண்டிக் கண்டெடுக்கப்பட்ட காரணங்களாகவே” உள்ளன. 

ஆகவே போக்குவரத்துக் கழக பேருந்துகளை அடித்தட்டு மக்கள் தவிர ஐ.டி. ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பணிக்குச் செல்வோரும் பயன்படுத்துகிறார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது சரியான அணுகுமுறையாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.

மக்களின் சேவைக்காகவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அந்த அடிப்படை நோக்கத்தை சிதறடிக்கும் விதத்திலும் நாட்டுடைமைத் தத்துவத்தைச் சிறுமைப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள இந்த பேருந்துக் கட்டண உயர்வு அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுக்குமே பாதிப்பை ஏற்படுத்தி தண்டிப்பதைப் போன்றதாகும். இந்தக் கட்டண உயர்வால் ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்துத் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்கள் மேலும் தாங்க முடியாத இன்னொரு கட்டண சுமை, விலைவாசி உயர்வு ஆகிய இரட்டிப்பு சுமையை தாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த வேதனைக்குரியது.

ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையினை ஏற்றும், மாநிலம் முழுவதும் மக்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக நடத்திக் கொண்டிருக்கும் போராட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், 19.1.2018 அன்று தமிழக அரசு அறிவித்துள்ள 67 சதவீதம் முதல் 108 சதவீதம் வரையிலான ரூபாய் 3,600 கோடி ரூபாய் அளவிலான பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...