கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதல் குழுக்கூட்டம்

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதல் குழுக்கூட்டத்தில், உரிமம் பதிவு செய்தல், குடிநீர் நிறுவனங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதல் குழுக்கூட்டத்தில், உரிமம் பதிவு செய்தல், குடிநீர் நிறுவனங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

உரிமம் பதிவு செய்தல் அவசியம் :

மாவட்டத்தில் செயல்படும் உணவு சார்ந்த வணிக நிறுவனங்கள் அனைத்தும் உணவுப் பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006-ன்கீழ் உரிமம் பதிவு செய்து கொண்டு வணிகம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அரசுத்துறை சார்ந்த உணவு நிறுவனங்களான, அங்கன்வாடி மையம், மதிய சத்துணவு மையம், நியாய விலைக்கடைகள், ஆவின் பாலகங்கள், ஆவின் முகவர்கள், இந்து சமய அறநிலைத் துறையின்கீழ் இயங்கும் அன்னதானக் கூடங்கள், போக்குவரத்து பணிமனைகளில் இயங்கும் உணவகங்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள், மது அருந்தும் கூடங்கள் (பார்கள்), மீன் வளர்ச்சிக்கழகத்தின் கீழ் இயங்கும் மீன்கடைகள், அரசு மருத்துவமனைகளில் இயங்கும் உணவகங்கள் மற்றும் இதர அரசு சார்ந்த நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பதிவு உடனடியாக இம்மாத இறுதிக்குள் 100 சதவீதம் எடுத்துக்கொண்டு வணிகம் செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

குடிநீர் நிறுவனங்கள் :

மாவட்டத்தில் இயங்கி வரும் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் கட்டாயமாக இந்திய தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று தொழில் செய்யவும், 20 லிட்டர் கொள்கலன் குடிநீர் கேன்களை சுத்தமாக பராமரிக்கவும், கேன்களை தகுந்த கால இடைவெளியில் மாற்றம் செய்யவும், குடிநீர் கேன்களை வாகனங்களில் எடுத்துச் செல்லும் போதும் சில்லறை விற்பனைக்காக சேமித்து வைக்கும் போதும் சூரிய ஒளி படாத வண்ணம் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது. மேற்கண்ட நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் எச்சரித்தார்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் :

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு உணவகங்களில் சூடான பொருள்களை பொட்டலமிடுபவர்கள், சில்லறை விற்பனைக்காக உணவுப்பொருட்களை பொட்டலமிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீதான ஆய்வின்போது, உள்ளாட்சி அமைப்புடன் உணவு பாதுகாப்பு துறையும் இணைந்து செயல்பட வேண்டும். மேலும், ஆய்வின்போது, உணவு வணிக நிறுவனத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது கண்டறிந்தால் உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பழைய செய்தித்தாள், காகிதங்களில் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் அச்சிடப்பட்ட மை இருப்பதால், அதில் பலகாரங்கள் வழங்குவதும் பொட்டலமிடுவதும் உணவு பாதுகாப்பு துறையினால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, அதனை பயன்படுத்துவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறைக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் :

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான பான்மசாலா, குட்கா தயாரிப்பவர்கள், சேமித்து வைப்பவர்கள், போக்குவரத்தில் கொண்டு செல்பவர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அதனை மீறும் வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தார். மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை ஒழிப்பதில் மாவட்டத்தில் 100 சதவீதம் நடைமுறைப்படுத்தும் பொருட்டு உணவு பாதுகாப்பு துறையும், மற்ற அரசுத் துறைகளான உள்ளாட்சித் துறை, சுகாதாரத்துறை, காவல் துறைகளும் இணைந்து செயல்பட வலியுறுத்தினார்.

பொதுமக்கள் தங்களது கட்டிடங்களை வாடகைக்கு விடும் போது, அதில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் ஏதேனும் சேமித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என்பதனை கண்காணித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

கலப்படத் தேயிலைத்தூள் :

மாவட்டத்தில் செயல்படும் பேக்கரி,உணவகங்கள், தேநீர்கடைகள் மற்றும் 5 ரூபாய் தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும் தேயிலைத்தூள் தரமானதாக இருக்க வேண்டும், கலப்பட தேயிலைத்தூள் தயாரிப்பவர்கள், மொத்த விற்பனையாளர்கள், தேநீர் தயாரிக்கப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியரால் எச்சிரிக்கப்பட்டது. மேலும், பொட்டலமிடப்பட்ட உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி காலாவதி தேதி, தயாரிப்பாளர்களின் முகவரி போன்ற விபரங்கள் அச்சிடப்பட்டு விற்பனை செய்ய வேண்டுமென அனைத்து உணவு வணிகர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் கடைகளில் பொட்டலமிடப்பட்ட உணவு பொருட்களை வாங்கும் போது மேற்கண்ட விபரங்கள் உறுதி செய்து வாங்கவேண்டுமெனவும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு பாக்கெட்கள் வாங்கும் போது அயோடின் அளவு குறிப்பிடப்பட்டுள்ளதா..? என பார்த்து வாங்கி பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். எனவே, பொதுமக்கள,; தரக்குறைவான உணவு, கலப்பட டீத்தூள், கலப்பட எண்ணெய், அளவுக்கு அதிகமான செயற்கை வண்ணம் கலந்த உணவுகள், மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள், பிளாஸ்டிக் சம்பந்தமான புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ் அப் புகார் எண்ணிற்கு தெரிவிக்கலாம், என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.



இக்கூட்டத்தில் வழிகாட்டுதல் குழுக்கூட்ட உறுப்பினர்களான அரசுத்துறை அலுவலர்கள், அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள், உணவக உரிமையாளர்கள் சங்கம், வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் நகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...