நெருங்கும் தீபாவளித்திருநாள் - கோவையில் பட்டாசு கடைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நிபந்தனை விதிப்பு

தீபாவளியையொட்டி கோவையில் பட்டாசு கடைகள் அமைத்திட விண்ணப்பிக்கும் முறை, கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.



கோவை: பட்டாசுகடையின் அருகில் மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், திருமண மண்டபங்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள பகுதிகள்/கட்டிடங்கள், டீ கடை இருத்தல் கூடாது என மாவட்ட நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது.

நவம்பர் மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு கடைகள் அமைத்திட விண்ணப்பிக்கும் முறை, கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளை கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-ஆம் ஆண்டில் தீபாவளி பண்டிகை எதிர்வரும் 12.11.2023 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளை தவிர்த்து) தற்காலிக பட்டாசுக்கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள், வெடிபொருள் சட்டவிதிகள் 2008ன் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிகப் பட்டாசு உரிமம் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி ஒற்றை சாளர முறையில் (Single Window System) பெற்றிடவேண்டும் என்பதன் அடிப்படையில் இணைய வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படி உரிமத்தினைப் பெறுவதற்கென தங்களது விண்ணப்பத்தினை நாளை 19.09.2023 முதல் 18.10.2023 ம் தேதிக்குள் இ.சேவை மையங்கள் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் 18.10.2023- க்குபின் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

அதன்படி விண்ணபிக்க தேவையான ஆவணங்கள்,

1) தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் புலம் 9 ச.மீ முதல் 25 ச.மீ. வரை உள்ளடக்கியதாகவும் புலத்தினை குறிக்கும் புலவரை படத்தில் சாலைவசதி, சுற்றுப்புறத்தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டுக்காட்டும். (Subrule-3) புலவரைபடம் (இ-சேவைமையத்தில் Scan செய்ய)

2) உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்புநிதிஆண்டில் வீட்டுவரி செலுத்திய இரசீது நகல்.

3) வாடகைக் கட்டிடம் எனில், உரிமையாளர் வீட்டுவரி செலுத்திய அசல் இரசீது நகலுடன் கட்டிட உரிமையாளரிடம் ரூ.20க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம்.

4) உரிய தலைப்பின் கீழ் அரசுக் கணக்கில் உரிமக் கட்டணம் ரூ.700/--அசல் செலுத்துச் சீட்டு (இ.செலான் கணினி மையத்தில் கட்டி இ-சேவை மையத்தில் Scan செய்யவேண்டும்)

5) மனுதாரரின் மார்பளவு (பாஸ்போர்ட்) அளவுள்ள வண்ணப் புகைப்படங்கள் 1(இ.சேவைமையத்தில் Scan செய்ய)

6) மனுதாரரின் அசல் நிரந்தர கணக்கு எண் (Pan Card), ஆதார் கார்டு, குடும்பஅட்டை/ ஸ்மார்ட் கார்டு)என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளான கூறப்பட்டுள்ளதாவது,

1) பட்டாசு கடைகளில் மேல்மாடியில் குடியிருப்பு மற்றும் பட்டாசு இருப்பு இருத்தல் கூடாது.

2) பட்டாசுகடையின் அருகில் மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், திருமண மண்டபங்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள பகுதிகள்/கட்டிடங்கள், டீ கடை இருத்தல் கூடாது. 

3) பொதுமக்கள் கூடும் பகுதிகள், பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையங்கள் அருகில் பட்டாசுகடை அமைத்தல் கூடாது.

4) பட்டாசுகடையின் கட்டிடத்தில் கண்டிப்பாக இரண்டு வழிகள் இருக்க வேண்டும். அதில் அவசரக்கால வழி கடையின் வெளிச் செல்லும்படி இருத்தல் வேண்டும்.

5) கட்டிடம் தார்சுவகை (R.C.Roofing) மேல்கூரையாக அமைந்திருத்தால் சுற்றளவில் 15 மீட்டருக்கு அதே வகை பட்டாசுகடை இருக்க கூடாது.

6) கட்டிடத்தின் பரப்பளவு Explosive Rules-2008-ன் விதியில் தெரிவித்துள்ளபடி அதன் அளவிற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும். (9Sqmt to 25 Sqmt) 

7) காலி இடத்தில் தற்காலிக பட்டாசுகடை அமைக்கும் போது 50 மீட்டர் சுற்றளவுக்கு காலியிடம் இருக்க வேண்டும். இரண்டு வழிகள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும்.

8) பட்டாசுகடை வைக்க கோருமிடத்திற்கு கதவு எண்ணுடன் கூடிய விலாசம் விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். 

9) திருமண மண்டபங்கள்,அரங்கங்கள், சமுதாய கூடங்கள் ஆகிய கட்டிடங்களில் பட்டாசுகடை அமைக்க கூடாது.

10) பட்டாசு உரிமக் கட்டணம் ரூ.700/-ஐ www.karuvoolam.tn.gov.in/challan/echallan என்ற இணையதளத்தில் செலுத்தியதற்கான அசல் செலுத்து சீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...