புத்தாண்டையொட்டி கேளிக்கை நிகழ்ச்சி நடத்துவதற்கு நெறிமுறைகளை வெளியிட்ட கோவை மாநகர காவல்துறை

புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவுள்ள ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய 26 வகையான நெறிமுறைகளை கோவை மாநகர காவல்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.



கோவை: புத்தாண்டை கொண்டாடும் விதமாக கேளிக்கை மற்றும் விருந்து நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பல்வேறு நெறிமுறைகளை கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புத்தாண்டு தினத்தையொட்டி கேளிக்கை மற்றும் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ள ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், விடுதிகள் மற்றும் உள்ளரங்குகள் ஆகியவற்றின் நிர்வாகங்கள் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இதற்கான நெறிமுறைகள் பின்வருமாறு,

1. ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், விடுதிகள் மற்றும் உள்ளரங்குகளுக்கு வரும் வாகனப் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் மற்றும் அவர்களது சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தகுந்த பாதுகாப்பு காவலர்களை (Security Guard) நியமிக்க வேண்டும்.

2. கேளிக்கை விருந்துகளுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு (Parking) சிறப்பு ஏற்பாடுகள் செய்து போக்குவரத்து நெரிசல் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. புத்தாண்டு தினத்தின்போது தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட இடங்கள் மற்றும் கட்டிடங்களில் ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் / விஷயங்கள் அல்லது சந்தேகத்திற்கு உரியவர்கள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக அதுகுறித்த தகவலை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

4. புத்தாண்டு விருந்துகளின் போது மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதை தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.

5. தங்கள் விருந்தினர் எவரேனும் மது அருந்தியிருந்தால் அவர் பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு செல்வதற்கு தேவையான ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தரவேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

6. புத்தாண்டு தின கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை பணி முடிந்ததும் அவர்களின் வீட்டிற்கு அவர்களை பாதுகாப்பாக அனுப்புவதற்கு தேவையான வாகன வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

7. அனைத்து ஹோட்டல்கள், கேளிக்கை அரங்குகள் மற்றும் தங்கும் விடுதிகளில் நிறுவப்பட்டுள்ள CCTV கேமராக்களின் செயல்பாடுகளை பரிசோதித்து அவை முழுமையாக இயங்குவதையும், CCTV கேமராக்கள் பதிவுகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுவதையும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும்.

8. ஷாப்பிங் மால்கள், உள்ளரங்கு பொழுதுபோக்கு இடங்கள், ஹோட்டல் மற்றும் விடுதி நிர்வாகங்களால் நடத்தப்படும் புத்தாண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளுக்கு மேலாக அனுமதி சீட்டோ அல்லது கூப்பன்களோ வழங்குதல் கூடாது.

9. ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், விடுதிகள் மற்றும் உள்ளரங்குகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டு விருந்து கொண்டாட்டங்களின் போது அநாகரிகமாவும், ஆபாச தன்மையுடன் கூடிய நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.

10. புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதை சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஹோட்டல் / விடுதி நிர்வாகத்தினர் உறுதி செய்ய இது குறித்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நிர்வாகம் தடுக்க தவறி அதன் மூலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

11. புத்தாண்டு தினத்தின்போது போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காக போக்குவரத்து மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து நகரம் முழுவதும் வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். மது அருந்திவிட்டு பிரச்சனை ஏற்படுத்துபவர்கள், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், வாகனப் பந்தயத்தில் (Racing) ஈடுபடுபவர்கள், இருசக்கர வாகனங்களில் சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தத்துடனும், ஒலிப்பான்களை ஒலிக்கச் செய்து கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள், பொதுமக்கள் நடமாட்டத்திற்கும், வாகன போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் விதமாக அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் செல்பவர்கள் ஆகியோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

12. கோவை மாநகரில் வாகன போக்குவரத்தை கண்காணிக்கவும், விபத்துக்களை தடுக்கும் விதமாகவும் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக 45 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு காவல் குழுக்கள் மூலம் வாகனத் தணிக்கை செய்யப்படவுள்ளன.

13. கோவை மாநகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களில் 31.12.2022-ஆம் தேதி இரவு புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

14. வாகன விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரை மீட்க நகரின் முக்கிய இடங்களாகிய அவிநாசி செல்லும் சாலையில் உள்ள அண்ணா சிலை, கொடிசியா சந்திப்பு, ஆர்.எஸ்.புரத்தில் D.B.ரோட்டில் தலைமை தபால் நிலையம் அருகில் மற்றும் உக்கடம் ஆத்துப்பாலம் சந்திப்பு ஆகிய இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படும்.

15. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 185-ன் படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக அனுமதிக்கப்பட்ட வரையறைக்கு மேலாக மது அருந்திவிட்டு வாகனம் இயக்குபவர்கள் Breath Analyser மூலம் கண்டறிந்து தக்க சட்ட பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அவர்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளான நபர், புத்தாண்டு தினத்தை அடுத்த வேலை நாளில் அவரது வாகனம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றுடன் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். காவல்துறை வாயிலாக பெறப்படும் அழைப்பாணையை பெற்று சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி அவரது வழக்கை முடித்துக் கொள்ள வேண்டும்.

16. வெளியூரில் இருந்து கோவை மாநகருக்குள் நுழையும் எல்லைகளில் 11 இடங்களில் எல்லைப்புற வாகனச் சோதனைச் சாவடிகளில் 24 மணிநேரமும் வாகனத் தணிக்கை தொடரப்பட்டு நகரினுள் நுழையும் அனைத்து வாகனங்கள் மற்றும் அதில் பயணிக்கும் வெளியாட்கள் கண்காணிக்கப்பட உள்ளனர்.

17. புத்தாண்டு நிகழ்வுகளின்போது குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக, பழங்குற்றவாளிகள் குறிப்பாக செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள், பிக்பாக்கெட்டில் ஈடுபடுபவர்கள் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் ஆகியோர்களின் செயல்பாடுகள் தீவிரமாக காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு தக்க குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

18. காவல் நிலையம் வாரியாக காலியாக உள்ள பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள காலியிடங்கள் மற்றும் திடல்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, புத்தாண்டு தினத்தன்று மேற்படி இடங்களில் தனி நபர்கள் அல்லது குழுவினர்கள் மது அருந்துவதை தடுக்கும் விதமாக சுற்றுக் காவல் ரோந்து பணி மேற்கொள்ளப்படும்.

19. பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கும் விதமாகவும், பிற குற்றச் செயல்களை தடுக்கும் விதமாகவும் குறிப்பாக செயின் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கோவை மாநகரில் 24 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், 44 இருசக்கர ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடும்.

20. புத்தாண்டு தினத்தையொட்டி, கோவை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களாக 9 இடங்கள், 13 முக்கிய சந்திப்புகள் 62 சர்ச்சுகள் மற்றும் 12 கோயில்கள் ஆகியவை கண்டறியப்பட்டு மேற்படி இடங்களில் போக்குவரத்தை சரி செய்வதற்கு பொது அமைதியை பேணுவதற்காக காவல்துறையினர் எண்ணிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.

21. புத்தாண்டு தினத்தையொட்டி அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தடாகம் ரோடு, பாலக்காடு மெயின் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு, கவுலி பிரவுன் ரோடு, மருதமலை ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தியமங்கலம் ரோடு, RG வீதி, VH ரோடு சாலை, பூ மார்க்கெட் ரோடு, திவான் பகதூர் ரோடு மற்றும் பிற முக்கியமான சாலைகள் ஆகிய இடங்களில் அதிக அளவிலான காவல்துறையினரை கொண்டு போக்குவரத்தும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட உள்ளது.

22. அவசர கால தேவைக்கென்று நகரின் முக்கிய பகுதிகளான கொடிசியா சந்திப்பு, தாமஸ் பார்க், LIC சந்திப்பு, உக்கடம் சந்திப்பு, ஆத்துப்பாலம் சந்திப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகம் ஆகிய இடங்களில் 6 அதிவிரைவு படைகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

23. 4 காவல் துணை ஆணையர்கள், 1 கூடுதல் காவல் துணை ஆணையர், 15 காவல் உதவி ஆணையர்கள், 41 காவல் ஆய்வாளர்கள், 172 உதவி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 900 காவல்கள், நான்கு சிறப்பு காவல்படை காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட 1,600 பேர் புத்தாண்டு தின பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

24. பொதுமக்கள், காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதோடு. புத்தாண்டு தின கொண்டாட்டம் குறித்த ஏதேனும் அசம்பாவிதம் அல்லது குற்றச் செயல்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் அவற்றை உடனடியாக கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண். 04222300970 மொபைல் எண், 9498181213 மற்றும் வாட்ஸ்அப் எண். 8190000100 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் தருபவர்கள் பற்றிய விவரம் பாதுகாக்கப்படும்.

25. மேலும், பொதுமக்கள் அவசர காலத்தில் தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள "காவல் உதவி" செயலி மூலமாகவும் காவல்துறையின் உதவியை நாடலாம்.

26. பொதுமக்கள் புத்தாண்டு தினத்தை நண்பர்கள் மற்றும் சுற்றத்தாருடன் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாடுவதற்கு தடையேதும் இல்லை. கோவை மாநகர காவல்துறையின் சட்டம் ஒழுங்கிற்கு பாதகமில்லாத வகையில் பொதுமக்கள் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதை வரவேற்கிறது.

இருப்பினும் புத்தாண்டு தின கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்யும் விதமாகவும், பொது அமைதிக்கு சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுவோர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்களை உபயோகிப்பது தொடர்பான விஷயங்கள் ஆகியவற்றில் கோவை மாநகர காவல் துறையானது எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காது என்பதையும் அத்தகையோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...