கோவை வழியாக செல்லும் நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் மீண்டும் இயக்கம்

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அடுத்தாண்டு ஜனவரி 27 ஆம் தேதி வரை கோவை வழியாக நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே செல்லும் வாரந்திர ரயில் சேவை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


கோவை: ஏழை, எளிய மக்களின் அதிகபட்ச ஆடம்பர பயணமாக பார்க்கப்படுவது ரயில் பயணம் தான். பொது போக்குவரத்தில் பேருந்துக்கு நிகராக பயணிகள் அதிகம் விரும்புவது ரயில் பயணத்தை தான்.

இந்த நிலையில் கோவையில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு பெரும்பாலான பொதுமக்கள் ரயில்களில் தான் பயணிக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்ட வாராந்திர ரயில் தான்.

மேட்டுப்பாளையம் - கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் மதுரை, சிவகாசி, தென்காசி வழியாக நெல்லைக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வந்தது.

நெல்லையிலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் சனிக்கிழமை காலை 7.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

இந்த ரயிலில் குறைந்தபட்சம் 70 சதவிகித பயணிகள் பயணிக்கின்றனர். தென்னக ரயில்வேக்கு லாபத்துடனேயே இந்த ரயிலை இயக்கி வந்தது. இந்த நிலையில் இந்த ரயில் சேவையானது கடந்த மே மாதம் முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரயில் பயணிகள், ரயில்வே சங்க நிர்வாகிகள் வாராந்திர ரயிலை இயக்க வேண்டும் என தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை முன் வைத்து வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற தென்னக ரயில்வே நிர்வாகம், அடுத்த மூன்று மாத காலத்துக்கு, இந்த வாராந்திர ரயில் இயக்கப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் வரை இயக்கப்பட்ட நிலையில், ஜூலை 8ஆம் தேதி மீது வாராந்திர ரயில் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு ரயில் பயணிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

70 சதவீத பயணிகளுடன் சென்ற வாராந்திர ரயில் ஏன் ரத்து செய்யப்பட்டது என்று ரயில் பயணிகள், சங்கங்கள் சார்பில் கேள்வியும் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து வாராந்திர ரயில் ஜூலை 21ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி வரை 5 வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த 5 வார காலம் முடிவடைந்ததன் காரணமாக நெல்லை - மேட்டுப்பாளையம் ரயில் சேவை கடந்த வாரத்தில் மீண்டும் ரத்து செய்யப்பட்டது. மூன்று முறை மீண்டும் மீண்டும் ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில் ரயில் பயணிகள் கடும் கொந்தளிப்புக்கு உள்ளாகினர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி முதல் 5 மாதங்களுக்கு நீட்டித்து. அதாவது நவம்பர் மாதம் வரை நீட்டித்து தென்னக ரயில்வே உத்தரவிட்டது.

ஆனால் அதே மாதம் நீட்டிக்கப்பட்ட நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் 5 வாரங்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பது பற்றி எந்த அறிவிப்பும் இதுவரை ஏன் வெளியிடப்படவில்லை என கேள்வி எழுப்பினர்.

ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்திருற தென்னக ரயில்வே பாரபட்சத்துடன் நடப்பதோடு மட்டுமல்லாமல் நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் பயணிகளை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

ரயில்வே துறைக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் கோயமுத்தூர் வழியாக இயங்கும் நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலை மீண்டும் இயக்க ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பயணிகளின் கோரிக்கையை ஏற்ற தென்னக ரயில்வே நெல்லை - மேட்டுப்பாளையம் ரயிலை மீண்டும் இயக்குவதாக அறிவித்திருக்கிறது. நீட்டிக்கப்பட்ட இந்த ரயில் சேவையானது அடுத்தாண்டு ஜனவரி 27ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலில் பயணிகள் வழக்கம் போல முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - நெல்லை ரயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...