கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை திட்டம் - கோவையில் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்..!

அனைத்து மாணவிகளுக்கும் கல்வியை முடிக்கும் வரையிலும் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.


கோவை: கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கோவையில் இதுவரை 15-ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், உறுதி செய்யவும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை, உயர்கல்வி உறுதி திட்டம் என்று மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும், அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வியை முடிக்கும் வரையிலும் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், அவர்கள் வேறு கல்வி உதவி தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் எனவும் அரசு அறிவித்தது.

இத்திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் பயின்று அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் தாங்களாகவோ, கல்லூரி மூலமாகவோ www.penkalvi.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யலாம்.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஜூன் 30-கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூலை 10-வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஜூலை 7-ந் தேதிக்குள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கல்லூரி கல்வி இணை இயக்குனர் உலகி சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். 2 மாறுபட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டதால் மாணவிகள் குழப்பம் அடைந்திருக்கின்றனர். அதே நேரம் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பல கல்லூரிகளின் பெயர்களும், பாடப்பிரிவுகளும் இடம் பெறவில்லை.

அதேபோல ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தகவல்களில் திருத்தம் ஏதேனும் இருந்தால் அதை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து கோவை மண்டல கல்வி இணை இயக்குனர் உலகி கூறியதாவது:-

இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்வதில் கல்லூரிகளும், மாணவிகளும் சில இடர்பாடுகளை எதிர்கொள்வதாக தெரிவித்தனர். அவற்றைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திட்டத்தில் பதிவு செய்வதற்கு ஜூலை 10-ந் தேதி தான் கடைசி நாள். எனவே அது வரையிலும் பதிவு மேற்கொள்ளலாம். கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற 18 ஆயிரம் மாணவிகள், கல்லூரிகளில் இளநிலை பட்டம் பயின்று வருகின்றனர். இவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் இந்த திட்டத்தில் பயன் பெற விண்ணப்பித்து உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...