வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை: கோவை மாநகராட்சி ஆணையர் தகவல்..!

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும், விரைவில் வாரம் ஒரு முறை தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியுள்ளார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் நாளொன்றுக்கு 265.70 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது. சிறுவாணி அணை பகுதியில் மழை இல்லாத காரணமாக நீர்மட்டம் 15 அடிக்கும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது.

இதனால் கேரளா அரசு சார்பாக சிறுவாணி அணை பகுதியில் இருந்து 50 எம்.எல்.டி நீர் மட்டுமே கடந்த சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சனை தீவிரமடைந்தது. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கும் சூழ்நிலை உருவானது.

இதனிடையே, கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வரிடம் தொலைபேசி மூலமாகவும், கடிதம் மூலமாகவும் கூடுதல் நீர் திறக்க வலியுறுத்தப்பட்டு தற்போது 101 எம்.எல்.டி. நீர் சிறுவாணி அணை மூலம் திறக்கப்படுகிறது. இதனால் தற்போது மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 நாட்களுக்குள் குடிநீர் வழங்கும் நிலை உருவாகியுள்ளது.

இது தவிர மாநகராட்சி பகுதிக்கு பில்லூர், பவானி மற்றும் ஆழியாறு திட்டங்களிலிருந்து தற்போது 181.00 எம்.எல்.டி குடிநீர் பெறப்பட்டு விநியோகம் நடைபெற்று வருகிறது. இத்துடன் மாநகராட்சி பகுதியில் தற்போது உள்ள 2042 ஆழ்குழாய் கிணற்றிலிருந்து குடிநீர் அல்லாத உபயோகங்களுக்கும் கிணற்று நீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது:-

தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க சிறுவாணியில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுகிறது. இதனால் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 நாட்களுக்கும் குறைவான நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய முடிகிறது.

இதனிடையே, பில்லூர் 3-ம் குடிநீர் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. இதுதவிர கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக சிறுவாணி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விரைவில் வாரம் ஒரு முறை தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...