கோவை 'ஷவர்மா' விற்பனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

உணவகங்களில் ஏதேனும் சுகாதாரக் குறைபாடுகள் இருந்தால் 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் ஷவர்மா கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் தனியார் உணவகம் ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும், சில மாணவர்கள் உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனை அடுத்து கேரளாவில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தமிழகத்திலும் இறைச்சிக் கடைகளிலும் விற்பனை செய்யும் கடைகளிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாகக் கோவை மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பெயரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் நேற்று பல்வேறு இடங்களில் (இறைச்சி உணவகங்கள், ஷவர்மா தயார் செய்யும் உணவகங்கள்) திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், போத்தனூர் சுந்தராபுரம் குனியமுத்தூர் பீளமேடு காந்திபுரம் சரவணம்பட்டி சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் 4-குழுக்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் ஷவர்மா தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் 73-கடைகளில் 57-கிலோ பழைய சிக்கன் ஷவர்மா பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது. மேலும் 35-கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 3-கடைகளுக்கு 6-ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஷவர்மா தயாரிப்பாளர்களுக்கு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

*ஷவர்மா தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

*உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவர் இடத்திலிருந்து மட்டும் தான் சிக்கன் போன்ற மூல உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

*சிக்கனை மசாலாவுடன் கலக்கும் பொழுது கையுறைகள் அணிந்து இருக்க வேண்டும்.

*தயார் செய்யும் பணியாளரும் ஏனைய பணியாளர்களும் டைபாய்டு போன்ற உணவு சம்பந்தப்பட்ட தொற்று நோய்களுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்தித் தொற்று இல்லாதவர் என்று மருத்துவரிடம் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

*ஷவர்மா தயார் செய்யும் அடுப்பு தூசிகள் படுமாறு வைத்திருக்கக் கூடாது. சாலையோரமாக வைத்திருக்கக் கூடாது.

*ஷவர்மா நன்கு வேகவைத்து நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டும்.

*ஷவர்மா தயார் செய்யும் அடுப்பு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அடுப்பில் வைத்து வெந்த 2-மணி நேரத்திற்குள் ஷவர்மாவை பரிமாற வேண்டும். அடுப்பை மிதமான வெப்பநிலையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

*பரிமாறியது போக மீதமுள்ள ஷவர்மாவை கழிவுகளாக அகற்றிட வேண்டும்.

*ஷவர்மாவை குறைந்தபட்சம் 70-டிகிரி செல்சியஸ்சில் வேக வைக்க வேண்டும். சமைப்பவரின் கைகள் படாமல் தயாரித்து நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யாரேனும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல் விற்பனை செய்தால் எவ்வித முன்னறிவிப்புமின்றி கடைகள் மூடப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஷவர்மாவை வாங்கும் முன்னர் அவை சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்து வாங்க வேண்டும் என்றும், தயாரிப்பில் ஏதேனும் சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...