குடும்ப அட்டை மூலம் பெற்ற ரேஷன் பொருட்களை விற்றால் குடும்ப அட்டை ரத்து - கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!

குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டை மூலம் பெற்ற பொருட்களை பிறருக்கு விற்றால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படுவதுடன் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



கோவை: குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் தங்கள் குடும்ப அட்டை மூலம் பெற்ற பொருட்களை பிறருக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு குடும்ப அட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் அறிக்கையில் கூறியிருப்பதாவது: நியாய விலை கடைகளில் தொழில்நுட்பம் வாயிலாக குடும்ப அட்டைதாரர்கள் விபரம் சரிபார்க்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், குடும்ப அட்டையில் உள்ளவர்கள் நியாய விலை கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளுக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள், வயது முதியவர், கொடிய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டும் அவர்களது குடும்ப அட்டை பொருட்களை பெற ஒரு நபரை அங்கீகரித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்/வட்ட வழங்கல் அலுவலர் ஒப்புதல் அளிக்கப்பட்ட அங்கீகார சான்று மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைரேகை பதிவாகாத நபர்கள் அருகில் உள்ள வங்கி அல்லது தபால் நிலையம் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் ஆதார் மையத்தில் கைரேகைகளை புதுப்பித்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைக்கு பெற்ற பொருட்களை பிறருக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் தமிழ்நாடு அத்தியாவசிய பண்டங்கள் சட்டம் 1955-ன் கீழ் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, குடும்ப அட்டை ரத்து செய்ய நடவடிக்கையும் எடுக்கப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்பத்திற்கு பெறப்பட்ட பொது விநியோக திட்ட பொருட்களை பிறருக்கு விற்பனை செய்வது குற்றச்செயல் எனப்படுவதாலும் பொது விநியோக திட்ட பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கு வழிவகுக்கும் என்பதால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...