கோவை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் எடுத்த உரிமைதாரர்களால் நடத்தப்படாமல் உள்வாடகைக்கு மாற்று நபர்களால் நடத்தப்படுவது கண்டுபிடிப்பு..!

உள் வாடகைதாரர்களுக்கு அரசு அளிக்கும் சலுகையினைப் பயன்படுத்தி, அவர்களது பெயரில் கடை உரிமத்தினை மாற்றி தங்களுக்கான சட்டபூர்வ அங்கிகாரத்தினை பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் தகவல்.


கோவை: கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் குறிப்பிட்ட கடைகள் ஏலம் எடுத்த உரிமைதாரர்களால் நடத்தப்படாமல் உள்வாடகைக்கு மாற்று நபர்களால் நடத்தப்பட்டு வருவது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உள்வாடகைக்கு கடை நடத்துபவர்கள் அவர்களது பெயரில் கடை வாடகையினை செலுத்த இயலாது. மேலும் கடை தொடர்பாக மாநகராட்சியில் எவ்வித உரிமையும் கோர இயலாது. இதுபோன்று மாநகராட்சி கடைகளை உள் வாடகைக்கு எடுத்து நடத்தும் நபர்களுக்கு அவர்களது பெயரில் கடை உரிமத்தை மாற்றிக் கொள்ள ஓர் வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் அவர்கள் பயன் அடைவார்கள்.

இவ்வாறு கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேற்கு மண்டலம் வார்டு எண். 10 மேட்டுப்பாளையம் ரோடு, எம்ஜிஆர் மொத்த காய்கறி மார்க்கெட் பழைய மற்றும் புதிய கடைகளில், கடைகளை ஏலம் எடுத்த உரிமைதாரர்களால் நடத்தப்படாமல் , பழைய கடைகளில் 19 நபர்களும், புதிய கடைகளில் 6 நபர்களும் ஆகமொத்தம் 25 நபர்கள் உள் வாடகை அடிப்படையில் கடைகளை நடத்தி வந்தனர்.

அரசு ஆணையின்படி, அனுமதியற்ற அனுபோகதாரர்களின் நேர்வில், ஒருமுறை மட்டுமே அளிக்கப்படும் சலுகை அடிப்படையில் குத்தகை உரிமையை அவர்கள் பெயரில் மாற்றித்தரலாம். இதற்காக விண்ணப்பதாரர் 12 மாதங்களுக்குரிய மாதாந்திர குத்தகை தொகைக்கு சமமான தொகையை முன்பணமாகச் செலுத்த வேண்டும்.

இது தவிர 12 மாத வாடகைக்கு சமமான தொகையை பெயர் மாற்ற கட்டணமாகவும் செலுத்த வேண்டும். அதனடிப்படையில் மேற்காண் 25 நபர்கள் மாநகராட்சி நிர்ணயம் செய்யும் வாடகை தொகை, வாடகை முன்பணம் மற்றும் பெயர் மாற்றக் கட்டணம் ஆகியவற்றினை செலுத்துவதாக உறுதிமொழிப்பத்திரம் மற்றும் மாறுதல் கோரியுள்ள அனுபோகதாரர்கள் கூட்டு வியாபார விலகல் ஒப்பந்த கடித நகல்கள் ஆகியவற்றுடன் பெயர் மாற்றத்திற்கான மனுக்களை சமர்ப்பித்தனர்.

இதையடுத்து, மனுக்களை பரிசீலித்த பின்னர் மேற்காண் 25 நபர்களிடமிருந்து வாடகை முன்பணம் மற்றும் பெயர் மாற்றக் கட்டணமாக ரூ.57,38,264/- வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதேபோல் மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை உள்வாடகை அடிப்படையில் நடத்தி வருபவர்கள், கடை உரிமத்தினை அரசாணையின்படி தங்களது பெயரில் மாற்றிக் கொள்ளலாம்.

இதற்கென மாநகராட்சியால் வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில், உரிய விபரங்களைப் பூர்த்தி செய்து, கீழ்க்காணும் ஆவணங்களை இணைத்து மண்டல அலுவலகங்களில் உதவி வருவாய் அலுவலர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பப் படிவங்களை அளிக்கலாம்.

இதன் மூலம் உள் வாடகைதாரர்களுக்கு அரசு அளிக்கும் சலுகையினைப் பயன்படுத்தி, அவர்களது பெயரில் கடை உரிமத்தினை மாற்றி தங்களுக்கான சட்டபூர்வ அங்கிகாரத்தினை பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ராஜ கோபால் சுன்கரா இ.ஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:-

1.கூட்டு வியாபார விலகல் ஒப்பந்தம்

2.உறுதிமொழி பத்திரம்

3.கடை வாடகை நிலுவையின்றி செலுத்திய இரசீது நகல்

4.ஆதார் அட்டை நகல்

5.வாரிசுதாரர் எனில் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்களின் நகல்



Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...