Govt Notification
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மூடல்: கோவை மாநகராட்சி உத்தரவு
SimpliCity News Team File Photo · 10 Jan 2022
கோவை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் தினமான 15.01.2022 மற்றும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் நினைவு தினமான 18.01.2022 ஆகிய தினங்களில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15.01.2022 அன்று “திருவள்ளுவர் தினம்” மற்றும் 18.01.2022 அன்று “வள்ளலார் இராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை” முன்னிட்டு அன்றைய தினங்களில் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, கணபதி மாடு அறுவைமனை, போத்தனூர் செட்டிபாளையம் மாடு அறுவைமனை, துடியலூர் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியின் கீழ் இயங்கும் மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உத்தரவை மீறிச் செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.