புத்தாண்டு கொண்டாட்டங்கள்: அதிவேகமாக, குடிபோதையில் வாகனங்களை இயக்குவோர் மீது ஐபிசி பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படும் - கோவை எஸ்.பி செல்வநாகரத்தினம் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் புத்தாண்டு பாதுகாப்பிற்காக 1300 போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் உரிய அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பவர்கள், ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்படுவர்.



கோவை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு வகையான தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, வாகனங்களில் வெளியே சுற்றாமல், அனைவரும் வீட்டில் இருந்தபடியே புத்தாண்டை கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோவையில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று கோவை மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் சோதனைச் சாவடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆய்வு செய்தார்.

மேலும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு முறையான போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும், பேருந்துகளில் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுரை வழங்கினார்.



பின்னர், செய்தியாளர்களிடையே பேசிய அவர், "புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் புத்தாண்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 1300 போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் உரிய அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பவர்கள் ஆகியோரை கண்காணிப்பதற்கு ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, அதிவேகமாக விபத்து ஏற்படும் வகையில் வாகனங்களை இயக்குவோர் மீது ஐபிசி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்கும் பட்சத்தில் அவர்களது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அரசின் எச்சரிக்கையை மீறி, கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தும் தனியார் விடுதிகள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும்", என்று தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...