தேர்தல் திருவிழா 2019: டிஜிட்டல் யுத்தம்...! அரசியல் கட்சிகளின் இணைய அரசியல்

பேசிப்பேசியே ஆட்சியை பிடித்த தமிழகத்தில், எந்தவித ஆரவாரமும் இல்லாமல் மெளனமாக ஆட்சியை பிடிக்க அரசியல் கட்சிகள் முயற்சித்து வருகின்றன.


பேசிப்பேசியே ஆட்சியை பிடித்த தமிழகத்தில், எந்தவித ஆரவாரமும் இல்லாமல் மெளனமாக ஆட்சியை பிடிக்க அரசியல் கட்சிகள் முயற்சித்து வருகின்றன. 

அரசியல் கட்சிகள் இணையம் மூலமாக நடத்தும் டிஜிட்டல் யுத்தம், தேர்தல் வாக்குப்பதிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. எப்படி நடக்கிறது இந்த மெளன புரட்சி??...



திரிபுரா என்ற சின்னச்சிறு மாநிலம். அங்கு அசைக்க முடியாத சக்தியாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. தொடர்ந்து கால் நூற்றாண்டாக அக்கட்சியே ஆட்சியும் செய்தது. அதில் இரண்டு பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்தார் மாணிக் சார்கார். கவுன்சிலர்களே கோடிகளில் புரளும் காலத்தில், ஆயிரங்களில் கையிருப்பு வைத்திருக்கும் ஏழை முதலமைச்சர் என ஆச்சரியமாக பார்க்கப்பட்டவர். 



எளிமையான, நேர்மையான முதலமைச்சர் என போற்றப்பட்ட மாணிக் சார்கார் அரசு மீது பெரிய அதிருப்தி இருக்கவில்லை. இருந்தும் கடந்த ஆண்டு மாணிக் சார்கார், பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தார். அதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் மாணிக் சார்கார் அரசு மீது, எதிர்மறை கருத்து உருவாக்கம் கட்டமைக்கப்பட்டது என்ற அக்கட்சியினரின் ஒரு கருத்து கவனிக்கத்தக்கது.

கட்டமைக்கப்படும் பிம்பங்கள் மாணிக் சார்கார் ஆட்சியை இழந்தற்கும், மோடி அரசு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தற்கும் கருத்து உருவாக்கமே காரணம். அதில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றின. நேரடியான கருத்து உருவாக்கத்தை விட மறைமுகமாக கருத்து உருவாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதில் நேரடியாக எங்களுக்கு தேர்தலில் வாக்களிங்கள் என கேட்பதை விட, மாற்றத்தை விரும்பி மாற்றி வாக்களிக்கும் வைக்கும் பாணி கடைபிடிக்கப்பட்டது.

2009 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, மதவாதத்தை முன்னிறுத்தி வெற்றி பெற முடியாது என்பதை பாஜக தெளிவாக உணர்ந்திருந்தது. அதற்கு மாற்றாக வளர்ச்சி எனும் மாற்றத்தை யுக்தியாக கையாண்டது.



குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி வளர்ச்சியின் முகமாக பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டார். ஊழலுக்கு எதிரான வளர்ச்சி நாயகன் என பாஜக கட்டமைக்க முயன்றது. அதற்கு சமூக வலைதளங்கள் பெருமளவில் கைகொடுத்தது. 



அண்ட்ராய்டு போன்கள் ஒவ்வொருவர் கையிலும் தவழ துவங்கியிருந்த காலகட்டம் அது. இண்டர்நெட் சேவை குறைந்த விலைக்கு கிடைத்ததால், பலரும் சமூக வலைதளங்களுக்குள் கை வைத்தனர். ஐடி ஊழியர்கள் துவக்கி வைத்த டிஜிட்டல் கருத்துருவாக்க முயற்சியை, பாஜக தன்வசப்படுத்தியது. 



பாஜக ஆதரவு என்பதை காட்டிலும், காங்கிரஸ் எதிர்ப்பு முன்னிலை படுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி மற்றும் தலைவர்கள் மீதான வலைதள தாக்குதல் தொடர்ந்தது. காங்கிரஸ் கட்சி இந்த தாக்குதலை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. விளைவு, அடுத்த தேர்தலில் எதிர்பார்த்ததை காட்டிலும் படுதோல்வியை சந்தித்தது. பாஜக எதிர்பார்த்ததை காட்டிலும், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது.



டிஜிட்டல் அரசியல் பாடத்தை கற்று தந்த பாஜகவிற்கே, பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைகளின் போது “கோ பேக் மோடி” என உலகளவில் டிரெண்ட் செய்து பாடம் புகட்டுவது, டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி.



இந்தியாவின் முதல் டிவிட்டர் அரசியல்வாதி, நரேந்திர மோடி தான். இன்று டிவிட்டரில் தான் பல கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. 

திமுகவின் டிஜிட்டல் கருத்து கேட்பு 2014 ல் தமிழகத்தில் பெரிய சறுக்கலை சந்தித்த கட்சி, திமுக. ஒரு மக்களவை உறுப்பினரை கூட பெற முடியாத அளவு படுதோல்வி. 2 ஜி ஊழல் புகார், திமுக மீதான அதிருப்தி ஆகியவை அதற்கு மிக முக்கிய காரணங்கள். 



இதை உருவாக்கியதில் சமூக வலைதளங்களுக்கு முக்கிய பங்குண்டு. இதனை கட்சி தலைமை உணர துவங்கிய விளைவாக தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய வேலை என்பது திமுக மீதான விமர்சனங்களுக்கு மறுப்பு எழுதுவது தான். அதற்கு அடுத்தே மற்ற கட்சிகளை விமர்சிப்பதும், திமுகவை முன்னிலைப்படுத்துவதும். 



நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களின் கருத்தை கேட்கிறது, திமுக. 



இதற்கு டிவிட்டர், பேஸ்புக், ஜிமெயில் ஆகியவற்றை பயன்படுத்தும் அளவிற்கு, தன்னை அக்கட்சி மாற்றிக்கொண்டிருக்கிறது.



அதிலும் குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கை குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவனிடம் இருந்து ஒரு மெயில் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் 2019 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் “உண்மையான மக்களின், உண்மையான பிரச்சணைகள்” மீது திமுக கவனம் செலுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் மற்றும் தேசிய அளவில் என்னென்ன பிரச்சணைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனவும், மக்கள் நலன் சார்ந்த ஒவ்வொரு பிரச்சணையையும் தனது கட்சிக்கு தெரியப்படுத்தவும் எனக்கூறி, தங்களது கருத்துக்களை பதிவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதுகுறித்து திமுகவினரிடம் கேட்ட போது, “மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக திமுக தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும். இளைஞர்கள், பெண்கள், பட்டதாரிகள் அதிகம் நிறைந்த சமூக ஊடகங்கள் மூலமாகவும் கருத்துக்களை கேட்டு வருகிறோம். நல்ல கருத்துக்கள், திட்டங்களை தேர்தல் அறிக்கையில் சேர்த்து கொள்ள திட்டமிட்டுள்ளோம். கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன” என்றனர்.



கோவையை சேர்ந்த ஐ.டி. ஊழியரான சதீஷ்குமார் என்பவருக்கும் திமுகவின் மெயில் வந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்கையில், “அது எப்படி தேர்தல் வந்தால் மட்டும், நாம் அரசியல் தலைவர்கள் கண்ணுக்கு தெரிகிறோம்?, கண்துடைப்பிற்காக அரசியல் கட்சிகள் இதுபோல கருத்து கேட்கின்றன. தேர்தல் முடிந்தவுடன் தேர்தல் அறிக்கையின்படி வெற்றி பெற்றவர்கள் மக்களின் அத்தியாவசியத்தை பூர்த்தி செய்வதில்லை. மீண்டும் கண்கவர் தேவைகளை தேர்தலுக்கு தேர்தல் வைத்து வாக்கு கேட்கிறார்கள்” என்றார்.

பாஜகவின் வாட்ஸ் ஆப் யுக்தி 

"தினமும் ஒரு 15 நமிடங்கள் மோடிஜியின் நல்லாட்சியை வாட்ஸ் ஆப்பில் பார்வேர்ட் செய்ய முடியுமா? முடியுமென்றால் இணையுங்கள், நண்பர்களுக்கு பகிருங்கள்".



இப்படி வரும் 2019 தேர்தலில் மோடிஜிக்காக சமூக வலைதளங்களில் பரப்புரை செய்ய விருப்பம் உள்ளவர்களை பாஜக திரட்டி வருகிறது. இதற்காக தொகுதி வாரியாக பாஜகவினரால் வாட்ஸ் ஆப் குரூப்புகள் அமைக்கப்படுகிறது.



ஒரு பாஜககாரர் ஒரு வாட்ஸ்ஆப் குரூப் ஓபன் பண்ண வேண்டும். அதில் அரசியல் சார்பற்ற மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என ஆட்களை சேர்க்க வேண்டும். அதன் பின் சிலபல பாஜக ஆட்கள் சேர்க்கப்படுவார்கள். வழக்கம் போல குட்மார்னிங், இந்த கடவுள் படத்தை உடனே ஷேர் செய்தால் நல்லது நடக்கும், மருத்துவ தகவல் என பார்வர்ட் மெசெஜ் வந்திட்டு இருக்கும். இடையிடையே அரசியல் கலந்த செய்திகள் வர ஆரம்பிக்கும். இது பொய், போட்டோஷாப் என மறுக்கும் 'ஆன்டி இந்தியன்கள்" கண்டறிந்து நீக்கப்படுவார்கள். அதன்பிறகு வழக்கம் போல அதிக எதிர்கட்சி எதிர்ப்பு, கொஞ்சம் பாஜக ஆதரவு என அஜண்டாவுக்கு தகுந்த மாதிரி அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். 



இதில் பொய்யான தகவல்களும், போட்டோஷாப் படங்களும் அதிகளவில் இடம்பெறுவதாகவும், மத உணர்வை தூண்டும் வகையில் பொய்யான தகவல்கள் அதிகளவில் பரப்பபடுவதாக கூறும் எதிர்கட்சிகள், ஒரிரு மாதங்கள் கழித்து பாஜக தவிர மற்ற அனைத்துகட்சிகளுமே இந்திய தேச விரோதிகள் என்னும் மன நிலையில் அந்த குரூப்பில் உள்ள அனைவருமே மாறி இருப்பார்கள் என்கின்றனர். மேலும் பாஜகவை எதிர்க்கும் பக்கங்கள் தாங்கள் இன்னார் என்பதை வெளிப்படையாக சொல்லும். ஆனால் பாஜக ஆதரவு பக்கங்களோ ஸ்டேண்ட்ஸ் ஏகென்ஸ்ட் கரப்பசன், ரிட்யயர்ட் ரவுடி, மரண கலாய் போன்ற பல பெயர்களில் நடுநிலை வேசத்தோடு செயல்படுகின்றன என்ற புகாரையும் அவர்கள் முன்வைக்கின்றன. 

“இதை பாஜக மட்டும் செய்வதில்லை. அனைத்து கட்சிகளும் இப்படி தான். நாங்கள் செய்தால் மட்டும் தவறா? திராவிட, கம்யூனிச கட்சிகள் மோடி எதிர்ப்பை இப்படி தான் விதைத்துள்ளன. அதை மாற்றும் வகையிலும் மோடியின் நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்லும் வகையில் மோடி பேன்ஸ், மோடி பார் எவர் போன்ற பெயர்களில் வாட்ஸ் ஆப் குழுக்களை இயக்கி வருகிறோம்” என்கிறது, பாஜக. 

இணைய யுத்தம்

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் ஒரு தனியார் தொலைக்காட்சி சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு கருத்து கணிப்பு எடுத்தது. அதில் யார் நல்லாட்சியை தருவார்?, வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரும் கட்சி தலைவர் யார் என்பது போன்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அத்தனைக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என பதில் வந்த போது, அந்நிறுவனமே ஆடிபோனது. 



அதற்கு பின்னரே சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் ஆக்டிவாக இருப்பதும், மொத்தமாக பல ஐடிகளில் இருந்து கருத்து பதிவிட்டதையும் அந்நிறுவனம் உணர்ந்தது. தொடர்ந்து சமூக வலைதளங்களின் மூலமாக நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது.



“நான் உங்கள் அன்பு சகோதரி ஜெ.ஜெயலலிதா பேசுகிறேன்” என்ற செல்போன் அழைப்பு பலருக்கும் நினைவிருக்கும். வாய்ஸ் காலில் வாக்கு கேட்கும் பாணியை, அதிமுகவினர் கடந்த சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தினர். இதேபோல எஸ்.எம்.எஸ் மூலமாகவும் பல கட்சிகள் வாக்கு கேட்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் நாளிதழ், தொலைக்காட்சி போல சமூக வலைதளங்களும் ஒரு முக்கியமான ஊடகமாக உள்ளன. டிவிட்டர், பேஸ்புக் கணக்கு இல்லாத அரசியல் தலைவர்களே இல்லை. ‘அட்மின்’களை வைத்தேனும் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன. 



ஒவ்வொரு கட்சியும் தனக்கென தகவல் தொழில்நுட்ப அணியை வைத்துள்ளது. சில பிரபல பதிவர்கள் கருத்துக்களை டிரெண்ட் செய்ய பணம் டிமாண்ட் செய்கின்றன என்ற புகாரும் உள்ளது. சில கட்சிகள் பணம் கொடுத்தும் கருத்திட வைக்கின்றன. சமூக வலைதள கருத்துக்கள் பலதரப்பட்ட மக்களிடம் எளிதாக சென்றடைவதும், கருத்துருவாக்கத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்குவதுமே இதற்கு காரணம். இதற்காக அரசியல் கட்சியினர் பல பேக் ஐடிகளை பயன்படுத்தவும் செய்கின்றனர் அரசியல் கட்சிகளுக்கு இணைய அரசியல் முக்கியம் தான். இது உருவாக்கும் கருத்துருவாக்கம் தற்காலிகமானதே.



இணையத்தில் யுத்தம் செய்வதை விடுத்து, வீதிகளில் கொட்டி கிடக்கிறது பிரச்சணைகள். சக மனிதனின் முகம் பார்ப்பதும், அவர்களின் பிரச்சணைகளுக்கு செவி கொடுப்பதும் தான் அரசியல் கட்சிகளுக்கு நீடித்த நிலையான வளர்ச்சியை தருமென்பதை உணர வேண்டும். 

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...