சர்வதேச உடல் உறுப்பு தான தினம் : யார் உடல் தானம் செய்யலாம்? எந்த உறுப்புகளை தானம் செய்யலாம்?

கோவை: "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"


கோவை: "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 

என்பும் உரியர் பிறர்க்கு" 

அன்பில்லாதவர் எல்லாம் தமக்கே என சுயநலமாக இருப்பர், ஆனால் அன்புள்ளவர்கள் தனது எலும்பையும் கூட பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர் என்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்டது. இன்றைய காலகட்டத்தில் உடல் உறுப்பு தானம் செய்யும் அன்புள்ளம் கொண்டவர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது இந்த குறள்.



உயிரிழப்பு

ஆபத்தான சூழல்களில் நோய்வாய்ப்பட்டும், உறுப்புகள் செயலிழந்தும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உறுப்புகள் செயலிழந்தவர்களுக்கு மற்றவர் உறுப்பைப் பெற்று அதனை முறையாக பொருத்தும் அளவுக்கு மருத்துவம் வளர்ந்துவிட்டது. அதே நேரத்தில், உடல் உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

வருடந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்து மரணமடைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. அவ்வாறு, உயிருக்குப் போராடுபவர்களை காப்பாற்ற உடல் உறுப்பு தானம் என்பது மிக அவசியமாக உள்ளது. இன்றைய நவீன காலத்தில் சமூக மாற்றங்களாலும் விழிப்புணர்வுகளாலும் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அது போதுமானதாக இருப்பதில்லை.

தானம்

உடல் உறுப்பு தானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, வாழும்போது தானம் செய்வது. மற்றொன்று, இறந்த பிறகு தானம் செய்வது. இதில் வாழும்போது தானம் செய்பவர்கள் தங்கள் உறவின் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பால், உடல் உறுப்பு தானம் செய்வார்கள். 

இறந்த பிறகு உடல் உறுப்பு தானம் செய்வது, இரண்டு வகைப்படும். ஒன்று இயற்கை மரணமாக மரணித்தவரின் உடலிலிருந்து உறுப்புகளை எடுத்து தானம் செய்வது, மற்றொன்று மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்வது.

எந்த உறுப்புகளை தானம் செய்யலாம்?

சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல் ஆகிய உறுப்புகளை தானம் செய்யலாம். அறுவை சிகிச்சை மூலமாக முழு உறுப்பையும் மாற்றாமல் கண்ணின் கருவிழி, தோல் ,எலும்பு, தசை நாண், சவ்வு, இதய தடுக்கிதழ் போன்ற சில திசுக்களை திசு கொடையாக வழங்கலாம்.

அதேபோல, உயிரோடு இருக்கும் வரை இரத்த தானம், இறந்த பின் கண் தானம் என்ற அடிப்படையில் கண் தானத்திற்கு போதுமான விழிப்புணர்வுகள் இருக்கிறது. தமிழகத்தில் கோவை அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கண் தானம் செய்ய முன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 19 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் சிறுநீரக தேவைக்கான 12 பேர் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் தானத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அதேபோல கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தத் தோல் ஒட்டும் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இதற்காக தோல் தானங்களும் வழங்கப்பட்டு வருகிறது. தோல் மாற்று அறுவை சிகிச்சையானது கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கங்கா மருத்துவமனை மட்டுமே எடுக்க உரிமம் பெற்றுள்ளது.

ஆகவே தோல் தானம் செய்ய எவரேனும் முன்வந்தால் கோவை அரசு மருத்துவமனையில் தானம் பெறப்பட்டு கங்கா மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது. இதில் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து இதுவரை 3 பேர் தோல் தானம் செய்துள்ளனர்.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதி கோவை அரசு மருத்துவமனையில் இல்லாத நிலையில், அந்த சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளை பொதுமக்கள் நாடுகின்றனர். இதனால், பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணம் வசூலிக்கப்படுகிறது. பணத்தைத் திரட்ட முடியாது ஏழை மக்கள் மரணிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

அரசு மருத்துவமனையில் இந்த வசதி இல்லை என்ற இந்த குறைபாட்டை தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உடல் மாற்று அறுவை சிகிச்சையை செய்து பல லட்சங்கள் வசூலித்து வருகின்றன.

இதய மாற்று சிகிச்சை ஏழை-எளிய மக்களுக்கு கிடைக்க, கோவை அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தீவிர முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த கோரிக்கை தமிழக அரசால் நிறைவேற்றப்படும் என உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்த் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறியதாவது:- 

 

நாங்கள் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி கல்லூரி போன்ற பல இடங்களில் உடல் உறுப்பு தானத்தை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இது இளைஞர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதால் இளைஞர்கள் ஆர்வத்தோடு தானம் செய்ய முன் வருகின்றனர்.

நாங்கள் கொடுக்கும் உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்குப் பின் நாங்கள் இதற்கான ஒரு அடையாள அட்டையை வழங்குவோம். அதேபோல மிக முக்கியமாக நாம் உடல் உறுப்பு தானம் செய்ய உறுதியளித்ததை தங்களுடைய குடும்பத்தினருக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

ஏனென்றால் உடல் உறுப்பு தானம் செய்த நபர் சுயநினைவற்றோ அல்லது இறந்த நிலையிலோ அவர் உடல் தானம் செய்ததை அவர்கள் உறவினர்கள் அறியாதிருந்தால் பயனளிக்காமல் போகலாம். உறுப்புகளை தானம் பெறுபவர்கள் வரிசைப்படியே பெற முடியும். ஆகவே உறுப்புகள் மாற்று சிகிச்சைக்கு நோயாளிகள் காத்திருக்கும் சூழல் உள்ளது. இதை சரிசெய்ய உறுப்பு தானம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். 

என்று அவர் கூறினார்.

முன்னோடி மாநிலம்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் உறுப்பு மாற்று சிகிச்சைகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது.

இதில் பணத்தை செலவு செய்து சிகிச்சை பெற தயாராக இருப்பவர்களுக்கு தான் இந்த உடல் உறுப்பு தானம் பயன்படுகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதுகுறித்து தோழர் அறக்கட்டளையின் பொறுப்பாளர் சாந்தகுமார் கூறியதாவது:- 

கோவை அரசு மருத்துவமனையில் இதயம், கல்லீரல் போன்ற முக்கியமான மாற்று அறுவை சிகிச்சை இருந்தால் கண்டிப்பாக இது ஏழை எளியவர்களுக்குப் பயன்படும். ஆனால், இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இங்கு இல்லாததால் பட்டியலிலுள்ள அடுத்த மருத்துவமனைக்கு வரிசைப்படி செல்கிறது. 

இதனால் வரிசையில் உள்ள தனியார் மருத்துவமனைகள், வசதியுள்ள நோயாளிகள் ஆகியோருக்கு இந்த உறுப்புகள் தானமாக கொடுக்கப்படுகிறது. இதற்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட செலவுத் தொகையாக லட்சக்கணக்கான ரூபாய்கள் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கின்றனர்.

எனவே, ஏழை-எளியோரிடம் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முழுமையாக சென்றடைவது இல்லை. எனவே சாதாரண மக்களுக்கும் எளிமையாக பயன்பட அரசு மருத்துவமனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பு தான சிகிச்சைகளை கொண்டுவர அரசு முன்வர வேண்டும்.

என்று கூறினார்.

சட்டங்கள்

மனித உறுப்புகளின் தானம் வியாபார ரீதியில் நடப்பதைத் தடுப்பதற்காக, மனித உறுப்பு மாற்றுச் சட்டம் கடந்த 1994-ல் அமலாக்கப்பட்டது. இந்த சட்டமானது கடந்த 2011-ம் ஆண்டு சீர்திருத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி, மனித உடலில் உள்ள உறுப்புகள் தொடர்பான தவறான தகவல்களை சமர்ப்பித்தால் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

அதே போல பத்து லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும். இதில் மனித உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டால் ஒன்று முதல், மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை அபராதமும் வசூலிக்கப்படும்.

மருத்துவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் போது முதல் முறையாக குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் மூன்று வருடங்களுக்கு மாநில மருத்துவ பதிவேட்டில் இருந்து தற்காலிகமாக பெயர் நீக்கம் செய்யப்படுவார்கள். தொடர் குற்றங்களில் ஈடுபடும் மருத்துவர்களை நிரந்தரமாகவும் நீக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்படிப் பல சட்டதிட்டத்தின் படி இந்த உடல் உறுப்பு கொடையானது செயல்படுகிறது.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர்.சௌந்தரவேல் கூறுகையில், "தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை, இளைஞர்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் தானத்தை குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.



இதனடிப்படையில், தமிழகம் மற்ற மாநிலங்களை விட உடல் தானம் மற்றும் உடல் உறுப்பு தானத்தில் முன்னோடியாக உள்ளது. இந்த விஷயத்தில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாக ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாகச் செய்யப்படுகிறது.

நமது கோவை அரசு மருத்துவமனையில் 550-க்கும் மேற்பட்டோர் உடற்கூறு ஆய்வுக்காக தங்களுடைய உடலை தானமாக கொடுத்துள்ளனர். அதேபோல கடந்த எட்டு மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் முழு உடல் தானம் செய்துள்ளனர். இப்படி பல விழிப்புணர்வு மூலம் உடல் தானம், உடல் உறுப்பு தானம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அனைத்துமே வெளிப்படைத்தன்மையுடன், சட்டதிட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவதால் முறைகேடுகள் என்ற பேச்சுக்கே இடமில்லை." என்றார்.

"அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்ற திருக்குறளின் படி தற்போது உடல் உறுப்பு தானங்கள் நாட்டில் அதிகரித்துவருகிறது. இதை இன்னும் முழுமையான அளவிற்கு கொண்டு சென்று ஏழை எளியோர்கள் பயன்படும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், அனைத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் செய்ய அரசு முன்வந்தால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவர்.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...