கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக அமைந்த நடன நிகழ்ச்சிகள்

கோவை பாரதீய வித்யா பவனம் ஆண்டுதோறும் சிறந்த நடனக்குழுக்களை அழைத்து நாட்டிய விழா நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பை மையமாக வைத்து நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த ஆண்டு, 'திருத்தலங்கள்' என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், சென்னை, பெங்களூரு மற்றும் கோவையைச் சேர்ந்த ஐந்து பிரபலமான நடனக் குழுக்கள் முருகன், சிவன், திருமால், விநாயகர், தேவி ஆகிய தெய்வங்களுக்கான தலங்களைப் பற்றிய நடனங்கள் அரங்கேறின.



முதல் நாளன்று, முதல் நிகழ்ச்சியாக பவனம் நடத்தும் நுண்கலைப்பள்ளியின் ஆசிரியை ஷெரின் ஜார்ஜ், தனது மாணவர்களுடன் 'சுர வந்திதா' என்ற தலைப்பில் தேவியைப்பற்றிய அழகான நிகழ்ச்சியை வழங்கினார். தொடர்ந்து, விருது பெற்ற கலைஞர்கள் நடத்தி வரும் 'ரஸிகா அகாடமி ஆஃப் பர்ஃபார்மிங்க் ஆர்ட்ஸ்' பள்ளியைச் சேர்ந்த நடன மணிகள் 'முருகன் தலங்கள்' என்ற தலைப்பில் சில புகழ் பெற்ற தலங்களைப்பற்றி நடனம் ஆடினர். பழனி, திருச்செந்தூர், சுவாமி மலை, வள்ளிமலை, குக்கே சுப்ரமணியா ஆகிய தலங்களைப்பற்றி அவர்களின் நடனம் அமைந்திருந்தது. மிகச்சிறந்த அழகுணர்ச்சியுடனும், அதீதமான வேகத்துடனும் விறுவிறுப்புடனும் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.



 

இரண்டாம் நாளன்று 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்ற தலைப்பில், சென்னையைச் சேர்ந்த கனகசபை நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 'அட்ட வீரட்ட'த் தலங்களைப் பற்றிய நடனம் வழங்கினார்கள். திருக்கண்டியூர், திருக்கோவலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி, திருப்பறியலூர், திருவதிகை, திருக்கடையூர், திருவழுவூர் ஆகிய தலங்களைப் பற்றிய புராணங்களைக் கோர்த்து குரு சசிரேகா ராம் மோகன் மிக அழகாக நடன நிகழ்ச்சியை அமைத்திருந்தார். தேர்ந்த அறிஞர்களின் உதவியுடன், நல்ல முறையில் ஆராய்ச்சி செய்து, அற்புதமான பாடல்களுடனும், இனிய இசையுடனும், அழகான நாட்டிய அமைப்புடனும் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந்தது.



அன்றைய இரண்டாவது நிகழ்ச்சியாக கோவையைச் சேர்ந்த மீனாக்ஷி சாகரின் ஆராதனா நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் விநாயகர் தலங்களைப் பற்றிய நடன நிகழ்ச்சியை வழங்கினர். சென்னையில் மத்ய கைலாஷில் அமைந்துள்ள 'ஆத்யந்தப்ரபு' கோயிலைப் பற்றிய பாடலுடன் துவங்கிய நடனத்தில், திருவலஞ்சுழியில் உள்ள வெள்ளை விநாயகர் கோயில், பிள்ளையார்ப் பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயில், திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த விநாயகர் கோயில் ஆகியவற்றைப் பற்றிய புராணக்கதைகள் இடம்பெற்றன. தமிழ்நாடு மட்டுமின்றி மகாராஷ்டிரத்தில் உள்ள அஷ்ட விநாயகர் கோவில், சித்தி விநாயகர் கோவில் ஆகியவை பற்றிய நடனங்களும் அழகாக காட்டப்பட்டது, மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.



மூன்றாவது நாளின் முதல் நிகழ்ச்சியாக கோவையைச் சேர்ந்த உமா கோபாலகிருஷ்ணனின் சங்கரா நாட்டியாலயா மாணவிகள் திருவரங்கம் பற்றிய நடன நிகழ்ச்சியை வழங்கினார்கள். திருவரங்கத்தின் சிறப்பைக்கூறும் பாடல்களும், அங்கே நடைபெறும் அரையர் சேவை, சேர்த்தி சேவை, ஒய்யாரி சேவை போன்ற சடங்குகளும், திருவிழாக்களும், கண்ணைக்கவரும் விதமாக வழங்கப்பட்டன. மிகப்பொருத்தமான பாசுரங்களும், பவானி கிஷோர் குமாரின் உணர்வுபூர்வமான பாட்டும் அருமையான துணை இசைக்கலைஞர்களும் இணைந்து, மிக அழகாக இந்நிகழ்ச்சியை அமைத்துக்கொடுத்தனர்.



முத்தாய்ப்பாக அமைந்தது. ஜலதீபா சசி குமாரின் கிரியாஞ்சலி நாட்டியப்பள்ளி வழங்கிய 'திருக்கடையூர்' என்ற நாட்டிய நிகழ்ச்சி. இந்தத் திருத்தலத்தைப் பற்றிய சுவையான புராணக்கதைகளை அழகாக வடிவமைத்திருந்த ஜலதீபா, அமிருத கடேஸ்வரர், மார்க்கண்டேயர், அபிராமி பட்டர், குங்கிலியக்கலய நாயனார் போன்றோரைப் பற்றிய நிகழ்ச்சிகளை இனிய பாடல்களுடனும் விறுவிறுப்பான ஜதிகளுடனும் இணைத்து, மனம் மகிழும் வண்ணம் வழங்கினார். இவருடைய நிகழ்ச்சிக்கும் மிக நல்ல இசைக்குழு துணையாக அமைந்து நிகழ்ச்சியை மேலும் சிறக்க வைத்தது.



இந்த 18வது நாட்டிய விழாவில் பெங்களூருவைச் சேர்ந்த பிரபல நடனக்கலைஞர்கள் திரு. கிரண் சுப்ரமணியம் மற்றும் அவரது துணைவியார் திருமதி. சந்தியா சுப்ரமணியம் ஆகியோருக்கு 'நாட்டிய ரத்னா' என்ற விருதை பவனத்தின் தலைவர் திரு. கிருஷ்ணராஜ் வாணவராயர் வழங்கினார். மூன்று நாட்கள் நடந்த இந்த நடன விழா நிகழ்ச்சிகளை பெருந்திரளான மக்கள் கண்டு களித்தனர்.

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...