கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று அவரது வாக்கினைப் பதிவு செய்தார்.
கோவை: கோவையில் வடவள்ளி, காளப்பட்டி என்று பல இடங்களில் இன்னும் வெளி மாவட்ட நபர்கள் இருப்பதாகவும், அவர்களை வெளியேற்ற தேர்தல் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று அவரது வாக்கினைப் பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை மாவட்டத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கடந்த ஆட்சியில் கொடுத்து இருக்கின்றோம்.
இதனால், கோவை மாவட்ட மக்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில், கோவையில் அனைத்து தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றி இருப்பதால், உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றிபெற தில்லுமுல்லு, விதிமீறல்களை திமுகவினர் செய்து வருகின்றனர்.
இதனால் தான், கூடுதல் அதிகாரியை கோவை மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், வடவள்ளி, காளப்பட்டி போன்ற பகுதிகளில் வெளிமாவட்ட நபர்கள் இன்னும் தங்கி இருக்கின்றனர். காவல் துறையினர் அவர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அந்த பகுதிகளில் விதிமுறைப்படி தேர்தல் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்றார்.
கோவையில் மேயர் பதவியை அதிமுக நிச்சயம் கைப்பற்றும் என தெரிவித்த அவர், நேற்று முன் தினமே ஆட்சியர் வெளிமாவட்ட நபர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், நேற்று தான் அறிவிப்பு கொடுக்கப்பட்டது, என்று சுட்டிக்காட்டினார்.
வெளிமாவட்ட நபர்கள் இன்னும் கோவையில் இருக்கின்றனர் எனவும், ஏதாவது சூழ்ச்சி செய்து வெற்றி பெற முயற்சிப்பார்கள் என்று தெரிவித்தார். மேலும், அதிமுக வெற்றி பெற்று இடங்களில், திமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதாகவும், இதனால் தான் விதிமீறல் இருந்தால், அதிகாரிகள் மீது தனிப்பட்ட முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்து இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.